Published : 01 Nov 2019 08:56 PM
Last Updated : 01 Nov 2019 08:56 PM
மதுரை,
மதுரையில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள காலாவதியான வெளிநாட்டு சாக்லேட்டுகளை புதிதாக மீண்டும் பேக்கிங் செய்து விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்த குடோனுக்கு உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள காலாவதியான வெளிநாட்டு சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
சாக்லேட்டுகள் என்றால் குழந்தைகளுக்கு அலாதி பிரியம். ஆனால், இந்த சாக்லேட்டுகளை வாங்கி கொடுக்கும் பெற்றோர், அது எந்த கம்பெனி என்றும், அதன் உற்பத்தி தேதி, விற்பனை தேதிகளைப் பார்த்தும் வாங்கிக் கொடுப்பதில்லை.
குழந்தைகள் கை காட்டும் சாக்லேட்டுகளை எவ்வளவு விலை இருந்தாலும் பெற்றோர்கள் அவர்களுக்கு வாங்கி கொடுக்கவே ஆர்வம் காட்டுகின்றனர்.
பொதுவாக வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் மட்டுமே, ஊருக்கு திரும்பும்போது விலை உயர்ந்த வெளிநாட்டு சாக்லேட்டுகளை தங்கள் குழந்தைகளுக்கும், உறவினர் வீட்டு குழந்தைகளுக்கும் வாங்கி வருவார்கள். இந்த சாக்லேட்டுகள் மதுரையில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் கிடையாது. விற்பனை செய்யும் அனுமதியும் இல்லை.
ஆனால், மதுரையில் தற்போது வெளிநாட்டு சாக்லேட்டுகள் விற்பனை அமோகமாக நடக்கிறது. மாவட்ட உணவுபாதுகாப்பு நியமன அலுவலர் சோமசுந்தரம் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தனித்தனியாக, சந்தேகத்திற்குட்பட்ட குடோன்கள், கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், முனிச்சாலையில் ஒரு குடோனில் வெளிநாட்டு சாக்லேட்டுகள் விற்பனை செய்வதற்காக மலைப்போல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து சோதனை செய்தபோது, அந்த சாக்லேட்டுகள் அனைத்தின் விற்பனை தேதியும் காலாவதியாகி இருந்தது.
அந்த ஒரே குடோனில் மட்டும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கலாவதியான சாக்லேட்டுகளை அவர்கள் பறிமுதல் செய்து அந்த குடோனுக்கும் ‘சீல்’ வைத்தனர்.
உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சோமசுந்தரம் கூறுகையில், ‘‘வெளிநாடுகளில் காலாவதியான சாக்லேட்டுகள் பொதுவாகவே விலை அதிகம். அந்த சாக்லேட்டுகள் அங்கு கலாவதியானதும், அங்கிருந்து கள்ள சந்தையில் கண்டெய்னர் வழியாக தமிழகத்திற்கு வந்து அனைத்து மாவட்டங்களுக்கு விற்பனை செய்வதற்கு கடத்தப்படுவதாக சந்தேகிக்கிறோம்.
தற்போது ‘சீல்’ வைக்கப்பட்ட குடோனில் வெளிநாட்டு சாக்லேட்டுகளில் இருந்து காலாவதியான தேத குறிப்பிட்டிருந்த ரேப்பர் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக புதிய ரேப்பர் தயாரிக்கும் பணியும் அங்கு நடந்தது. அதையும் கைப்பற்றினோம்.
அதனால், ஏதோ தற்செயலாக நடந்ததாக இதை கருதமுடியாது. நிரந்தமாகவே இதுபோல், கலாவதியான வெளிநாட்டு சாக்லேட்டுகளை உள்ளூர் வியாபாரிகள் வாங்கி இங்கு கிப்ட் பார்சல் செய்து அழகாக்கி கடைகளில் மீ்ண்டும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த சாக்லேட்டுகளை வாங்கி சாப்பிடும் குழந்தைகள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது, ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT