Published : 01 Nov 2019 05:21 PM
Last Updated : 01 Nov 2019 05:21 PM
அமைச்சர் கேட்டுக்கொண்டபடி அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அரசு கொடுத்த வாக்குறுதிப்படி தமிழக அரசு மருத்துவர் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேச வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை:
“ ஊதிய உயர்வு, காலமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்புகளில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த அரசு மருத்துவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி அதன் அடிப்படையில் மீண்டும் பணியிடம் வழங்க வேண்டும்.
நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட நான்கு முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வந்தன.
இப்போராட்டத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் பெருமளவில் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அனைத்து அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் ஆதரவாக இருந்தன.
இப்போராட்டத்தை கைவிட்டு ,பொதுமக்கள் நலன் கருதி மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்ற தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று, இன்று (1.11.2019) மருத்துவர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர். தமிழக அரசு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், பொதுமக்கள் நலன் கருதி வேலை நிறுத்தத்தை மருத்துவர்கள் தற்காலிகமாக கைவிட்டது வரவேற்கத்தக்கது.
போராட்டத்தை கைவிட்டு விட்டு வாருங்கள், பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என தமிழக அரசு கூறியது.எனவே, அதன் அடிப்படையில், மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினரை அழைத்து, தமிழக அரசு மீண்டும் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்.
இக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்பட்டு, மருத்துவர்களுக்கு சாதகமான தீர்வு எட்டப்படும் என 27.08.2019 அன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அளித்த வாக்குறுதியை அவர் நிறைவேற்ற வேண்டும்.
மருத்துவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகள், வழக்குகள், இட மாறுதல் உத்தரவுகளை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது”.
இவ்வாறு டாக்டர் ரவீந்திரநாத் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT