Published : 31 Oct 2019 05:50 PM
Last Updated : 31 Oct 2019 05:50 PM
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே நாய்கள் கடித்து காயமடைந்த புள்ளி மானை கிராம மக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ராமநாதபுரம் அருகே வழுதூர் நதிப்பாலம் பகுதியில் தண்ணீர் குடிக்க புள்ளி மான் ஒன்று வந்துள்ளது.
அந்த மானை நாய்கள் துரத்தி கடித்துள்ளது. அதனைக் கண்ட கிராம மக்கள் நாய்களிடமிருந்து காயமடைந்த மானை மீட்டு, ராமநாதபுரம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் வனச் சரகர் சதீஸ் தலைமையில் சென்ற வனத்துறையினர் மானை மீட்டு ராமநாதபுரம் அரண்மனை அருகே உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மானுக்கு கால்நடை மருத்துவர் வெங்கடேஷ் சிகிச்சை அளித்தார்.
இது குறித்து வனச்சரகர் சதீஷ் கூறியதாவது, வழுதூர் அருகே நாய்கள் கடித்து காயமடைந்த புள்ளி மானை கிராம மக்கள் மீட்டனர்.
அதனையடுத்து நாங்கள் சென்று பொதுமக்களிடம் இருந்து மானை மீட்டோம். அது 5 வயது மதிக்கத்தக்க பெண் மான் ஆகும். அதன்பின் அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தோம். மருத்துவமனையில் முதலுதவி மற்றும் நாய்கடி ஊசி செலுத்தியபின், தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் விடப்பட்டுள்ளது.
இதுவரை ராமநாதபுரம் பகுதியில் நாய்கள் கடித்து 15 மான்கள் மீட்கப்பட்டு மீண்டும் சரணாலயப் பகுதியில் விடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT