Published : 31 Oct 2019 02:06 PM
Last Updated : 31 Oct 2019 02:06 PM

மருத்துவர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்படும்; அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டம்

அமைச்சர் விஜயபாஸ்கர்: கோப்புப்படம்

சென்னை

போராடும் மருத்துவர்கள் இன்றைக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால், அவை காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்படும் என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.31) அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"போராட்டத்தில் உள்ள மருத்துவர்கள் இன்று மதியம் 2 மணிக்குள்ளாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்ற வாய்ப்பை வழங்கியுள்ளோம். அந்த வேண்டுகோளை ஏற்று நேற்று வரை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுள் 1,550 பேர் அரசின் கோரிக்கையை ஏற்று பணிக்குத் திரும்பி, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளனர். 3,127 பேர், இன்று நண்பகல் 12 மணி வரை போராட்டத்தில் இருக்கின்றனர்.

கன்னியாகுமரி, புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் போராட்டமே நடைபெறவில்லை. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 15,000 பேர் போராட்டத்தில் இருக்கின்றனர் என்ற செய்தி தவறானது. ஏழை, எளிய மக்களின் சிகிச்சைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். மக்கள் நலன் கருதி பணிக்குத் திரும்பிய மருத்துவர்களுக்கு நன்றி.

திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் செல்லும் படிக்கட்டுகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இது ஏற்புடையதல்ல. மருத்துவமனை வளாகம் போராட்டக்களம் அல்ல. அரசு கனிவுடன் கோரிக்கைகளை கேட்கிறது. எந்த நேரத்திலும் போராட்டக்காரர்களிடம் பேசத் தயாராக இருக்கிறது. கோரிக்கைகளை அரசு நிராகரிக்கவில்லை. 3,127 பேரில் 50 பேருக்குத்தான் பணி மாறுதல் அளித்திருக்கிறோம். தண்டிப்பது அரசின் நோக்கமல்ல. காலியான 50 இடத்தில் மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கிறது.

அரசு மருத்துவர்களின் சம்பளம், சலுகைகள்

எம்பிபிஎஸ் மட்டும் படித்த மருத்துவர்கள் பலர் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு ரூ.30,000-40,000 வரை மாத சம்பளம் இருக்கும். அரசு மருத்துவர்களுக்கு பணியில் சேர்ந்தவுடனேயே ரூ.80,247 சம்பளம் வழங்கப்படுகின்றது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை பார்க்கின்றனர். விடுமுறைகள், சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அவர்கள் எம்.டி., எம்.எஸ்., போன்ற மேற்படிப்பு படிக்க அரசே வாய்ப்பு வழங்குகிறது. அந்தப் படிப்புக் காலத்திலும் 3 ஆண்டுகளுக்கு பணிக்காலமாகக் கருதி முழு சம்பளம் வழங்குகிறது. படித்தவுடன் அவர்களை அரசு மீண்டும் பணியில் சேர்க்கிறது. சலுகைகளை அரசு கொடுத்துக்கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் மருத்துவர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை எங்களிடம் மருத்துவர்கள் வலியுறுத்தினர். அவர்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுப்போம் என அரசு உறுதியளித்திருக்கிறது. அதை ஏற்றுதான் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் சங்கம் பணிக்குத் திரும்பியது. எல்லா சங்கங்களையும் அழைத்துப் பேசியிருக்கிறோம்.

இன்றைக்குள் மருத்துவர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் அந்த இடங்கள் காலிப் பணியிடங்கள் என அறிவிக்கப்பட்டு, புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என திட்டவட்டமாகக் கூறுகிறேன்,"

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x