Published : 30 Oct 2019 12:19 PM
Last Updated : 30 Oct 2019 12:19 PM

சுஜித்தின் உடலை வெளியில் காட்டாதது ஏன்? - வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம்

ராதாகிருஷ்ணன் - சுஜித் புதைக்கப்பட்ட இடம்

சென்னை

சுஜித்தின் உடலை ஏன் வெளியில் காட்டவில்லை என்பதற்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று (அக்.30) சென்னை, எழிலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"காற்றழுத்தத் தாழ்வால் தமிழ்நாட்டின் தென்பகுதியில் கனமழைக்கான வாய்ப்புள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வடமாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

முதல்வரின் உத்தரவுப்படி, அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் இருக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீன்வளத்துறை எச்சரிக்கையின்படி, கன்னியாகுமரியில் ஆழ்கடலுக்குச் சென்ற 763 படகுகள் பாதுகாப்பாக கரைக்கு வந்துள்ளன. மீதியுள்ள 7 படகுகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தென்பகுதியில் ஆழ்கடலுக்குச் சென்ற 562 படகுகள் கரைக்கு வந்துள்ளன. மீதமுள்ள 3 படகுகளுக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

தேவைக்கேற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், திண்டுக்கல், கொடைக்கானல், மதுரை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

மாநிலப் பேரிடர் மீட்புத்துறை ஒவ்வொரு மாவட்டத்திலும் தயார் நிலையில் உள்ளது. வருவாய்த் துறை அமைச்சர் தொடர் கண்காணிப்பில் உள்ளார். மாநில கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது’’.

இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதையடுத்து, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை உயிருடன் மீட்காதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ராதாகிருஷ்ணன், "இறந்த குழந்தையை எப்படி மீட்பது என வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. அதனைப் பின்பற்றினோம். உடற்கூராய்விலும் மருத்துவர்கள் விதிமுறைகளைப் பின்பற்றினர். சுஜித் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டார். மாநிலப் பேரிடர் மீட்புத்துறை, தேசியப் பேரிடர் மீட்புத்துறை என அனைத்துத் துறையினரும் வேதனையுடன் பணியாற்றினர். பெற்றோர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாதபடி அரசு பக்கபலமாக இருக்கிறது.

திறந்த ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும். குழந்தை இறந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்த பிறகே உடலை அவ்வாறு எடுத்தோம். களப்பணியாளர்கள் அவ்வளவு உழைத்தும் அவர்கள் மீது விமர்சனம் வருகிறது. சுஜித் இறந்த வேதனை எல்லோருக்கும் உண்டு. களப்பணியாளர்கள், தன்னார்வலர்களின் எந்த யோசனைகளையும் நாங்கள் அலட்சியம் செய்யவில்லை. இம்மாதிரியான விபத்துகள் நடைபெறாமல் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திலிருந்து பெற்ற படிப்பினைகள் மூலம் ஆய்வு செய்யப்படும்" என்றார்.

சுஜித்தின் உடலைக் காட்டாதது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ராதாகிருஷ்ணன், "கும்பகோணம் தீ விபத்தில் குழந்தைகளின் சடலங்களை நேரடியாகக் காட்டியதற்கான விமர்சனங்களை அனைவரும் எதிர்கொண்டோம். அதன்பிறகு சடலங்களை வெளியே காட்டுவது குறித்த உரிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வகுத்துள்ளது. அதைப் பின்பற்றினோம். அதைவிடுத்து, என்னென்ன பாகங்கள் இருந்தன, இல்லை என நாங்கள் சொன்னால், இந்த விதிமுறைகளின் அடிப்படையில் எங்கள் மீது வழக்குத் தொடுக்க வாய்ப்புண்டு.

சடலம் என்ன மாதிரியான நிலையில் இருந்தது என்பதை பெற்றோரிடம் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். இதற்கு மேல் இந்த விஷயத்தில் விளக்கமளிப்பது விதிமுறைகளுக்கு எதிரானது.

இந்தச் சம்பவம் பேரிடர் இல்லை, விபத்து. அதற்கேற்ற வழிமுறைகளைப் பின்பற்றினோம். என்ஐடி மண்ணியல் நிபுணர் உடனிருந்துதான் இதனைச் செய்தோம். சிலர் யூகத்தில் சொல்கின்றனர். 24 மணிநேரமும் தொலைக்காட்சியில் காட்டிய ஆழ்துளைக் கிணறு மக்களுக்குப் பெரிதாகத் தெரிந்திருக்கிறது. மனிதனால் எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன. திறந்துள்ள ஆழ்துளைக் கிணறுகள் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளாக மாற்றப்பட வேண்டும்," எனத் தெரிவித்தார்.

மேலும், சுஜித் எப்போது இறந்திருப்பார் என்ற கேள்விக்கு மருத்துவ ஆராய்ச்சியின் மூலமே சொல்ல முடியும் எனவும், அதுகுறித்த சோதனை நடைபெற்று வருவதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சுஜித் உடல் மீட்புக்கு ரூ.11 கோடி செலவிடப்பட்டதாக வரும் செய்திகள் குறித்துப் பதிலளித்த ராதாகிருஷ்ணன், "வதந்திகளை நம்ப வேண்டாம், பேரிடர் மீட்பில் பணம் பொருட்டல்ல. யாரும் பணம் கேட்கவில்லை. இது வாட்ஸ் அப்பில் வரக்கூடிய வதந்திகள். நான் இதுகுறித்து பேட்டியே கொடுக்கவில்லை," எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x