Published : 29 Oct 2019 10:11 AM
Last Updated : 29 Oct 2019 10:11 AM
திருச்சி
குழந்தை சுஜித்தின் மீட்புப்பணியில் கண்துஞ்சாது ஈடுபட்ட அமைச்சர் விஜயபாஸ்கரின் முயற்சி வீணானது. 85 அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சுச்சத்தம் தான் என்னை மீட்புப் பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில் பாசப் பிணைப்பில் இணைத்து இயங்க வைத்தது. இனி நீ கடவுளின் குழந்தை என அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் தனது தோட்டத்தில் உள்ள ஆழ்துளை குழியில் குழந்தை சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை விழுந்தான். சிலமணி நேரத்தில் அங்கு வந்துவிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 4 நாட்களாக சிறுவனின் உடல் வெளியே எடுக்கும்வரை நடுக்காட்டுப்பட்டியிலேயே முகாமிட்டு மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தார்.
அவருடன் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோரும் இருந்தனர். தீபாவளி பண்டிகையையும் மறந்து, தூக்கம் மறந்து குழந்தை மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கருக்குக் குழந்தை இறந்த செய்தி தனிப்பட்ட முறையில் அதிர்ச்சியான ஒன்று.
நாடே ஆவலாகக் குழந்தை உயிருடன் மீண்டுவருவான் என எதிர்ப்பார்த்தவேளையில் குழந்தை பிணமாக மீட்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குழந்தையின் இறப்புக்குப் பலரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில் மீட்புப்பணியில் முழுநேரமும் ஈடுபட்டு குழந்தைக்கு மருத்துவமனையில் இறுதி அஞ்சலி செலுத்திய அமைச்சர் விஜயபாஸ்கர் தனது இரங்கலை வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.
அவரது இரங்கல் வருமாறு:
“நான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுர்ஜித்தின் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது. என் மனம் வலிக்கிறது. எப்படியும் வந்துவிடுவாய் என்றுதான் ஊனின்றி உறக்கமின்றி இரவு பகலாய் இமைமூடாமல் உழைத்தோம். இப்படி எம்மை புலம்பி அழவிடுவாய் என்று எண்ணவில்லை.
கருவறை இருட்டுபோல் உள்ளே இருப்பாய் என நினைத்தோம். கல்லறை இருட்டாய் மாறும் என்று எண்ணவில்லை. மருத்துவமனையில் வைத்து உச்சபட்ச மருத்துவம் வழங்க நினைத்துக் காத்திருந்தேன். இப்போது மார்ச்சுவரியில் பார்க்கும் நிலையில் இதயம் கனத்துக்கிடக்கிறது.
எண்பத்தைந்து அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சுச்சத்தம் தான் என்னை மீட்புப் பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில் பாசப் பிணைப்பில் இணைத்து இயங்க வைத்தது. மனதைத் தேற்றிக் கொள்கிறேன். ஏன் என்றால் இனி நீ கடவுளின் குழந்தை....
சோகத்தின் நிழலில் வேதனையின் வலியில்..”
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT