Published : 28 Oct 2019 11:16 AM
Last Updated : 28 Oct 2019 11:16 AM
நடுக்காட்டுப்பட்டி
குழந்தை சுஜித்தை மீட்கும் பணி கடைசிவரை தொடரும்; எக்காரணம் கொண்டும் மீட்புப் பணி பாதியில் கைவிடப்படாது என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2). கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணி அளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டான். அன்று தொடங்கிய மீட்புப் பணி 4-வது நாளாக இன்றுவரை முழுவீச்சில் நடந்துவருகிறது.
இந்நிலையில் இன்று (அக்.28) காலை நடுகாட்டுப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். மீட்புப் பணியில் உள்ள சவால்கள் குறித்து விளக்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:
குழந்தை சுஜித்தை மீட்கும் பணி எவ்வித தொய்வும் இல்லாமல் நடந்துவருகிறது. எக்காரணம் கொண்டும் மீட்புப் பணி பாதியில் கைவிடப்படாது. ஆனால், மீட்புப் பணியில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் இல்லை என்பதையும் சொல்லவேண்டும். 1 மணி நேரத்துக்கு 250 மீட்டர் முதல் 500 மீட்டர் வரையே குழி தோண்ட இயல்கிறது. உலகிலேயே சிறந்த ரிக் இயந்திரம் கொண்டுதான் குழி தோண்டி வருகிறோம். மாற்றுவழிகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். குழந்தையை மீட்க யாருடைய ஆலோசனையையும் ஏற்கத் தயாராக இருக்கிறோம். எல்லா தொழில்நுட்பங்களயும் பயன்படுத்துகிறோம். மீட்புப் பணியில் 550 பேர் உள்ளனர்.
இந்தப் பகுதியில் உள்ள பாறை ஃபெல்ட்ஸ்பார் என்ற வகையறாவைச் சேர்ந்தது. மிகவும் கடினமான இந்தப் பாறையை கவனமாக உடைக்க வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் குழிக்குள் தீ பிடிக்க வாய்ப்புள்ளது. அதனால், மீட்புப் பணியை நிபுணர்களின் அறிவரைப்படியே மேற்கொள்கிறோம்.
88 அடியில் குழந்தை..
குழந்தை சுஜித் 88 அடியில் இருக்கிறான். தொடர்ந்து ஏர் சக்ஷன் மூலம் கையை இறுக்கமாகப் பிடித்துவைத்திருக்கிறோம். கேமரா மூலமும் கண்காணித்து வருகிறோம். குழந்தையை மீட்பதில் இருக்கும் நடைமுறைச் சவால்களை மக்களிடமும் பெற்றோரிடமும் வெளிப்படையாகக் கூறிவருகிறோம். தவறான நம்பிக்கையை ஊட்டிவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறோம். குழந்தையின் பெற்றோருக்கு உளவியல் ஆலோசனை கொடுத்து வருகிறோம்.
12 மணி நேரமாவது ஆகும்..
தற்போது பயன்படுத்தப்படும் உயர் தொழில்நுட்பத்தைக் கொண்டு குழந்தையை மீட்கும் பணியைத் தொடர்ந்தால் மீட்புப் பணிக்கு 12 மணி நேரமாவது ஆகும். இறுதி நிமிடம் வரை மீட்புப் பணி தொடரும். இன்னும் 58 அடி வரை தோண்ட வேண்டியுள்ளது. பின்னர் பக்கவாட்டில் குழி தோண்டவேண்டும். அதை என்.எல்.சி. செய்யவுள்ளது. குழந்தை கீழே சென்றுவிடாமல் இருக்க பக்கவாட்டில் குழி தோண்டும்போது கம்பியை கீழை அமைத்து பாதுகாப்பு செய்துவிட்டே தொடர்வார்கள். மீட்புப் பணிக்கான செலவை அரசை ஏற்றுக் கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நடுக்காட்டுப்படியில் தற்போது சாரல் மழை பெய்துவருகிறது. இருப்பினும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குழந்தை சுஜித் உள்ள குழிக்குள் தண்ணீர் சென்றுவிடக் கூடாது என்பதற்காக குழியைச் சுற்றி மணல் மூடைகள் அடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT