Published : 28 Oct 2019 10:17 AM
Last Updated : 28 Oct 2019 10:17 AM

சிறுவன் சுஜித் மீட்புப் பணியில் இறுதி முடிவை எடுக்கும் தருணத்தில் இருக்கிறோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

நடுக்காட்டுப்பட்டி

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்கும் பணியில் இறுதிக்கட்ட முடிவை எடுக்கும் தருணத்தில் இருக்கிறோம் என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார்.

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "பாறைகள் தோண்டத் தோண்ட கடினமாக இருக்கின்றன. இதுவரை இவ்வளவு கடினமான பாறைகளைப் பார்ததே இல்லை. ஒரே மாதிரியான பாறைகளே தோண்டத் தோண்ட இருக்கின்றன. பாறைகளைத் தோண்டும் ரிக் இயந்திரத்தால் இனியும் முன்னேறிச் செல்ல இயலுமா எனத் தெரியவில்லை. ரிக் இயந்திரத்தால் தோண்டும் பணி பலனளிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இருப்பினும் புதிய பிளேட் சென்னையில் இருந்து இன்னும் 1 மணி நேரத்தில் வந்து சேரும்.

முதல் ரிக் இயந்திரம் இத்தாலியைச் சேர்ந்தது. இரண்டாவது ரிக் இயந்திரம் ஜெர்மணியைச் சேர்ந்தது. இந்த இரண்டு ரிக் இயந்திரங்களும் செயல்பட்டே பாறைகளைத் தாண்டிச் செல்வது கடினமாக இருக்கிறது.

அதனால், மாற்று வழி குறித்து துணை முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறோம்.

குழந்தை விழுந்து 4 நாட்களாகிவிட்ட நிலையில் மருத்துவர்களிடமும் ஆலோசனை செய்யவுள்ளோம். மீட்புப் பணியில் அனைத்து நிலைகளையும் ஆலோசித்து இறுதிக்கட்ட முடிவை எடுக்கும் சூழலில் இருக்கிறோம்.

குழந்தையின் பெற்றோரிடமும் பேசியிருக்கிறோம். நிலைமையை எடுத்துரைத்திருக்கிறோம். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதில் நிபுணத்துவம் பெற்றவர்களை அழைத்திருக்கிறோம். பேரிடர் மீட்புக் குழுவினர், நிபுணர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனையுடன் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம்" என்றார்.

அமைச்சருடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் இருந்தார்.

25-ம் தேதி கிணற்றுக்குள் விழுந்த சிறுவன்..

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2). கட்டிட தொழிலாளியான பிரிட்டோ வீட்டின் அருகே விவசாயமும் செய்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய நிலத்தில் விவசாயப்பணிக்காக 600 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டினார்.

காலப்போக்கில் அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாமல் போனதையடுத்து, அந்த ஆழ்துளைக் கிணற்றை முறையாக மூடாமல் விட்டுவிட்டார்.
இந்நிலையில், கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணி அளவில் அந்த நிலப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சுஜித் வில்சன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து விட்டான். இது குறித்து அறிந்து குழந்தை சுஜித்தின் தாய் கலாமேரி, அருகில் உள்ள மருத்துவமனை, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

சுஜித் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த தகவல் அரசுக்கு தெரிவிக்கப்பட்டவுடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப்பணியைத் துரிதப்படுத்தினார்கள்.

தற்போது 64 மணி நேரத்தைக் கடந்தும் மீட்புப் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணியில் இறுதிக்கட்ட முடிவை எடுக்கும் தருணத்தில் இருக்கிறோம் என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x