Published : 26 Oct 2019 04:17 PM
Last Updated : 26 Oct 2019 04:17 PM
சென்னை
தீபாவளி பண்டிகைக் காலத்தில், பேருந்துகளில் கட்டணக் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக மக்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர். விரைவு ரயில்களில் டிக்கெட் கிடைக்காத நிலையில், சற்று சொகுசாகப் பயணம் செய்ய விரும்பும் மக்களில் சிலர் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வது வழக்கம். இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு வழக்கம்போல் நேற்றும் பெரும்பாலான ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தைவிட 60 முதல் 80 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்டது. ஆம்னி பேருந்துகளில் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பது வாடிக்கையாகி விட்டது. ஆனால், ஆம்னி பேருந்துகளுக்கு அரசு கட்டணம் நிர்ணயம் செய்யாமல் இருப்பது ஏமாற்று வேலை என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பான, 'இந்து தமிழ்' செய்தியை சுட்டிக்காட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரசு இதனைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் இன்று (அக்.26) தன் ட்விட்டர் பக்கத்தில், "சொந்த ஊர்களுக்குச் செல்ல நினைப்பவர்களை நொந்த நிலைமைக்குத் தள்ளும் அளவில்தான் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை இருக்கிறது. நான்கு மடங்கு கட்டணம் செலுத்திப் பயணம் செய்யும் அளவுக்குப் பகல் கொள்ளை நடப்பதை போக்குவரத்துத் துறை தடுக்கவில்லை.
அதிகக் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் அரசியல்வாதிகள் தடுக்கிறார்கள் என அதிகாரியே சொல்கிறார் என்றால், இது மக்களைப் பற்றிக் கவலைப்படாத அரசு தானே! மக்கள் ஊர் திரும்புவதற்குள், அரசு அதிகாரிகளைச் செயல்பட வைத்து கட்டணக் கொள்ளையைத் தடுக்க வேண்டும்," என வலியுறுத்தியுள்ளார்.
சொந்த ஊர்களுக்குச் செல்ல நினைப்பவர்களை நொந்த நிலைமைக்குத் தள்ளும் அளவில் தான் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை இருக்கிறது.
நான்கு மடங்கு கட்டணம் செலுத்திப் பயணம் செய்யும் அளவுக்குப் பகல் கொள்ளை நடப்பதை போக்குவரத்துத் துறை தடுக்கவில்லை (1/2) pic.twitter.com/1lgS14TV9j— M.K.Stalin (@mkstalin) October 26, 2019
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT