Published : 26 Oct 2019 01:47 PM
Last Updated : 26 Oct 2019 01:47 PM

மிகச்சிறந்த பேரிடர் மீட்புக் குழு வந்துள்ளது; குழந்தை சுஜித்தை மீட்போம்: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

மணப்பாறை

குழந்தையை மீட்க தேசியப் பேரிடர் மீட்புக் குழுவும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவும் ஒன்றிணைந்து களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதால் அவர்கள் வசம் மீட்புப் பணியை ஒப்படைத்துள்ளோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மீட்புப் பணி நடக்கும் இடத்தில் நேற்று இரவு முதல் தங்கி பார்வையிட்டு ஆலோசனை தெரிவித்து வரும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு சம்பவ இடத்திலிருந்து அளித்த பேட்டி:

“நேற்று மாலை 5.30 மணி முதல் மாநில நிர்வாகம், ஆட்சியர், தீயணைப்புத் துறையினர் முழுமையாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். உட்சபட்சமாக தமிழக அளவில் இந்திய அளவில் என்னென்ன உயர் ரக வசதிகள் உள்ளதோ அத்தனை முயற்சிகள் மூலமாகவும் முயற்சி செய்து வருகிறோம்.

அதிகாலை 5.30 மணி வரை ஆட்சியர் சொன்னது போன்று குழந்தையின் இதயத்துடிப்பைக் கேட்டோம், அதன்பின்னர் குழந்தையின் இதயத்துடிப்பைக் கேட்க முடியவில்லை. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

குழந்தையை மீட்பது மிகப்பெரிய சவாலான விஷயமாக உள்ளது. அதிகாலை 2.30 மணி அளவில் குழந்தையை நெருங்கி மீட்கும் நிலையில் சென்றுவிட்டோம். ஓரிரு நிமிடங்களில் மீட்புப் பணி முடியும் நிலையில் திடீரென பின்னடைவாக குழந்தையை கட்டியிருந்த அந்த முடிச்சு அவிழ்ந்து குழந்தை இன்னும் அதிகப்படியான ஆழத்திற்குச் சென்றுவிட்டது.

கிட்டத்தட்ட 70 அடி ஆழத்தில் சென்று சிக்கிக்கொண்டது. அதன்பின்னர் முதல்வரிடம் பேசி டெல்லியில் தகவல் கொடுத்து தேசிய பேரிடர் மீட்புக் குழு வரவழைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தகவல் கிடைத்து அரக்கோணத்திலிருந்து வரும் பயணநேரம்தான் தாமதமே தவிர வேறு தாமதம் இல்லை.

அவர்களும் வந்துவிட்டார்கள். 30 பேர் கொண்ட குழு அது. பல இக்கட்டான நிகழ்வுகளில் சிறப்பாகப் பணியாற்றி விருது பெற்ற வீரர்கள். இதற்கென பயிற்சி பெற்றவர்கள். அதேபோன்று மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினரும் வந்துள்ளனர்.

இவர்கள் 70 பேரும் நாங்கள் மீட்புப் பணியைப் பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் சற்று விலகி நில்லுங்கள் எனக்கேட்டுக்கொண்டதன்பேரில் அவர்களது மீட்புப் பணிக்காக அனைத்தையும் ஒப்படைத்துவிட்டோம். அவர்கள் அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதால் மீட்புப் பணி வெற்றி அடையும் என நம்புகிறேன்.

வருங்காலங்களில் இதுபோன்ற நிலையைத் தவிர்க்க அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு எடுக்கும்”.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

நடந்தது என்ன?

மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ்- கலாராணி தம்பதியின் மகன் சுஜித் வில்சன் (2). பிரிட்டோ ஆரோக்கியராஜ் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகில் உள்ள வயலில் பாசனத்துக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஆழ்துளைக் கிணறு தோண்டியுள்ளார்.

பின்னர் கைவிடப்பட்ட அந்த ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி தற்போது மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக பெய்த மழையில் ஆழ்துளைக் கிணற்றில் மூடியிருந்த மண் உள்வாங்கியது. இது தெரியாமல் அந்தப் பகுதியில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த சுஜித் வில்சன் எதிர்பாராதவிதமாக ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தார்.

தகவல் அறிந்து மாவட்ட தீயணைப்புத் துறையினர், மணப்பாறை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்புத் துறையினரும், வருவாய்த் துறையினரும் விரைந்து சென்று குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இவர்களுடன் மருத்துவக் குழுவினரும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் ஒருங்கிணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

குழந்தை அவ்வப்போது கைகளை அசைத்த நிலையில் இருப்பதால், குழாய் மூலம் ஆழ்துளைக் கிணற்றுக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. மேலும் கேமரா மூலம் குழந்தையின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

தகவல் அறிந்து மாநில அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், என்.நடராஜன், எஸ்.வளர்மதி, மணப்பாறை எம்எல்ஏ சந்திரசேகர், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, எஸ்பி ஜியாவுல் ஹக் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர்.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் பிரத்யேகக் குழுவினர் சேலம், மதுரை, நாமக்கல் ஆகிய இடங்களில் இருந்து வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, இரவு 9 மணிக்கு மேல் மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர் கண்டறிந்துள்ள நவீன ரோபோ கருவியைப் பயன்படுத்தி குழந்தையை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்றது.

நள்ளிரவு 3 மணி அளவில் குழந்தையைப் பிடித்திருந்த முடிச்சு அவிழ்ந்த நிலையில் அதிகாலையில் குழந்தை மேலும் கீழே 70 அடி ஆழத்திற்குச் சென்றது. இதனால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. அதிகாலை 5.30 மணிக்குமேல் குழந்தையின் இதயத்துடிப்பை அறிய முடியவில்லை என ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிலையில் குழந்தையை மீட்க தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழு அழைக்கப்பட்டது. மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவும் விரைந்தது. இந்நிலையில் காலை 11 மணி அளவில் மாநிலப் பேரிடர் மீட்புக்குழு சமபவ இடத்திற்குச் சென்று சேர்ந்து, நிலைமையை கேட்டறிந்தது. அவர்கள் வந்த ஒரு மணி நேரத்திற்குள் தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினரும் அங்கு வந்தனர்.

மொத்தம் 70 பேர் கொண்ட மாநில, தேசியப் பேரிடர் மீட்புக்குழு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறை எஸ்பி, மீட்புக்குழுவினருடன் ஆலோசனை நடத்தி மீட்புப் பணியை தங்கள் கைவசம் எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து நிலைமையை ஆராய்ந்து வருவதாகவும் பக்கவாட்டில் ஊடுருவி மீட்கும் பணியை செய்ய உள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அதற்கு முன்னர் நிலத்தின் தன்மையை ஆராய்ந்து உடனடியாக களத்தில் இறங்குவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

சுரங்க வழி தோண்டி குழந்தையை மீட்கும் பணிகளை விரைவில் தொடங்குவோம் என அந்தக்குழுவில் இருந்த ரேகா நம்பியார் தெரிவித்தார். பல முக்கிய நிகழ்வுகளில் மீட்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட குழு என்பதால் குழந்தை பத்திரமாக மீட்கப்படும் என்கிற நம்பிக்கை அனைவருக்கும் வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x