Published : 26 Oct 2019 08:54 AM
Last Updated : 26 Oct 2019 08:54 AM

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு: கண்காணிப்பு வளையத்தில் சென்னை; கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து

வண்டலூர், பெருங்களத்தூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை சீர்படுத்த அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். வண்டலூரிலிருந்து செங்கல்பட்டு வரை பாதுகாப்பு ஏர்பாடுகளை நேரில் ஆய்வு செய்த காஞ்சி மாவட்ட எஸ்பி. கண்ணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள். படங்கள்: எம்.முத்துகணேஷ்

சென்னை

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு வளையத்துக்குள் சென்னை மாநகரம் கொண்டு வரப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தீபாவளிபண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டத்துக்காக மக்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். அனைத்து வர்த்தக மையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

‘தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சிக்கலாம்’ என மாநில அரசுகளை மத்திய உளவுத் துறை ஏற்கெனவே உஷார்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பை டிஜிபி ஜே.கே.திரிபாதி பலப்படுத்தியுள்ளார். அனைத்து ஐஜி, டிஐஜி, மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள் அனைவரும் விழிப்புடன் பணியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து, ரயில், விமான நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், பொது இடங்கள் அனைத்தும் போலீஸாரின் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 160-க்கும் மேற்பட்ட அப்பாவிகள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, கடலோரப் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை, கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, நெல்லை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 13 கடலோர மாவட்டங்களிலும் தமிழக கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டிஜிபி வன்னியபெருமாள் தலைமையில் போலீஸார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக அதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலைய போலீஸாருக்கு தெரிவிக்குமாறு மீனவர்களுக்கு போலீஸார் ஏற்கெனவே அறிவுறுத்தி உள்ளனர். கடலோர மாவட்டங்களின் எஸ்.பி.க்கள் உஷார்நிலையில் இருக்குமாறும் டிஜிபி அறிவுறுத்தி உள்ளார்.

கண்காணிப்பு வளையத்தில்...

சென்னையில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் 15 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், திரையரங்கு, பூங்கா, கடற்கரை, சுற்றுலாத் தலங்கள் உட்பட அனைத்து பகுதிகளையும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.

சென்னை முழுவதும் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள இரண்டரை லட்சம் சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை உன்னிப்பாக கவனிக்கும்படி கூடுதல்காவல் ஆணையர்கள் ஆர்.தினகரன், பிரேம் ஆனந்த் சின்ஹாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் தனிப்படை அமைத்து, சந்தேக நபர்களின் நடமாட்டத்தை கவனித்து வருகின்றனர். போலீஸாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x