Last Updated : 25 Oct, 2019 05:28 PM

 

Published : 25 Oct 2019 05:28 PM
Last Updated : 25 Oct 2019 05:28 PM

உசிலம்பட்டி அருகே கோர விபத்து: தீபாவளி பொருட்கள் வாங்க ஆட்டோவில் சென்ற பெண்கள் உட்பட 6 பேர் மரணம்- சோகத்தில் மூழ்கிய 3 கிராமங்கள்

உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க ஆட்டோவில் சென்ற 4 பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக மரணம் அடைந்தனர். மேலும், 7 பேர் காயமடைந்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகிலுள்ள கோடாங்கிநாயக்கன்பட்டியில் இருந்து இன்று மதியம் ஷேர் ஆட்டோ ஒன்று உசிலம்பட்டிக்குச் சென்றது.

இந்த ஆட்டோவை கோடாங்கி நாயக்கன் பட்டியைச் சேர்ந்த ரவி மகன் வினோத் ஓட்டினார். இந்த ஆட்டோவில் கோடாங்கிநாயக்கன்பட்டி மற்றும் பக்கத்து ஊரைச் சேர்ந்த 13 பேர் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்கென உசிலம்பட்டிக்குச் சென்றனர்.

இதே நேரத்தில் உசிலம்பட்டியில் இருந்து எழுமலை நோக்கி லாரி சென்றது. காராம்பட்டி என்ற இடத்தில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக லாரியும், சேர் ஆட்டோவும் கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதின. ஆட்டோ நொறுங்கியது.

இந்த கோரவிபத்தில் ஆட்டோவில் பயணித்த ஜோதிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த பெரியசாமி மகன் அசோக்(45), செல்லச்சாமி மனைவி முத்துலட்சுமி (50), சின்னராஜ் மனைவி வாசியம்மாள்(45), தாடையன்பட்டி பால்பாண்டி மனைவி சத்யா (38), உசிலம்பட்டி கீழப்புதூர் சேகர் மனைவி குருவம்மாள் (50), முத்தையா மகன் முருகன் (45) ஆகியோர் சம்பவ இடத்தில் மரணம் அடைந்தனர்.

இந்த விபத்தில் கோடாங்கிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த நாகஜோதி (30), அவரது மகள்கள் தனுஷாஸ்ரீ (10), சர்மிளா (9), வசந்தா(45), அய்யர்(48) ஆகியோர் காயம் அடைந்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்த எழுமலை காவல் ஆய்வாளர் தினகரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், காயமடைந்த 7 பேரும் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீபாவளியையொட்டி நடந்த இந்த கோர சம்பவத்தால் ஜோதிநாயக்கன்பட்டி, கோடாங்கி நாயக்கன்பட்டி, தாடையன்பட்டி கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் கோடாங்கி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வீரபாண்டியை போலீஸார் கைது செய்தனர்.

விதிமீறிய ஆட்டோவால் 6 பேர் மரணம்..

பொதுவாக ஒரு ஆட்டோவில் ஓட்டுநருடன் 4 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி உண்டு. ஷேர் ஆட்டோ என்ற பெயரில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏறிக்கொண்டு அசுர வேகத்தில் செல் வதால் இது போன்ற விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கும் சூழல் உருவாகிகிறது.

கிராமப் புறங்களிலும் மக்களும் ஆபத்தை உணராமல் இது போன்ற சேர் ஆட்டோக்களில் அதிகமாக பயணித்து, உயிரிழக்கும் சோகம் தொடர்கிறது.

விதிமீறும் ஆட்டோக்கள் மீது காவல்துறையினர் அவ்வப்போது, நடவடிக்கை எடுத்தாலும், பல நேரங்களில் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்கிறது. சேர் ஆட்டோக் களின் விதிமீறல் கட்டுப்படுத்தாவிடின், இது போன்ற கொத்து, கொத்தான மரணங்களும் தொடருவது தவிர்க்க முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x