Published : 25 Oct 2019 12:39 PM
Last Updated : 25 Oct 2019 12:39 PM

மருத்துவர்கள் போராட்டம்: முதல்வர் அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும்; ஸ்டாலின்

ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

போராடும் மருத்துவர்களை முதல்வர் அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (அக்.25) வெளியிட்ட அறிக்கையில், "18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களை போராட்டக் களத்திற்கு தள்ளிவிட்டிருக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு மருத்துவமனைகளையே நம்பியிருக்கும் லட்சக்கணக்கான உள்நோயாளிகளுக்கும், ஏற்கெனவே அறுவை சிகிச்சைக்கான தேதி குறிக்கப்பட்டவர்களுக்கும் ஏற்படும் கடுமையான பாதிப்பு குறித்து குட்கா புகழ் சுகாதாரத்துறை அமைச்சரோ, முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ கண்டுகொள்ளவில்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது.

அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு வழங்கக்கூடிய அரசாணை எண்: 354-ல் திருத்தம் செய்ய வேண்டும், இந்திய மருத்துவ கவுன்சிலின் ஆலோசனைப்படி மருத்துவர்கள் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது, கிராமப்புறங்களில் மருத்துவ சேவையாற்றும் மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவபடிப்பிலும், சிறப்பு மருத்துவமனையிலும் பணியாற்றவும், படிக்கவும் வாய்ப்பு வழங்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், மருத்துவ படிப்பை முடித்தவர்களுக்கு நேரடியாக கலந்தாய்வு மூலம் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு முக்கியக் கோரிக்கைகளை அரசு மருத்துவர்கள் முன் வைத்து போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். இந்த கோரிக்கைகளை எழுத்து பூர்வமாக அரசிடம் முன்கூட்டியே கொடுத்தும் - இதுநாள் வரை மருத்துவர்களை அழைத்துப் பேசி - இந்த போராட்டத்தை தடுக்க முடியாத கையாலாகாத் தனமான அரசாக அதிமுக அரசு விளங்குகிறது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிப்போம் என்று மருத்துவர்கள் கூறியிருப்பது ஒரு வகை ஆறுதல் என்றாலும், டெங்கு, பருவமழை தொற்று நோய்கள் பரவும் நேரத்தில் இது போன்றதொரு போராட்டத்திற்கு அரசே வழி அமைத்துக் கொடுத்திருக்கிறது. பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி முதல்வர் ஆலோசனை என்று பத்திரிக்கைளில் செய்தி வந்தாலும், அந்த ஆலோசனையில் கூட இந்த மருத்துவர்கள் போராட்டம் குறித்து விவாதித்து முதல்வர் ஏன் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை? மக்கள் எக்கேடு கெட்டால் என்ன? என்று முதல்வரும், அமைச்சர்களும் அமைதி காப்பதுதான் அதிமுக அரசின் நிர்வாக லட்சணமா?

அரசு மருத்துவமனைகளை நாடி வரும் மக்களுக்கும், அங்கு சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளுக்கும் உயிர்நாடி மருத்துவர்கள் என்பதை முதல்வர் உணர்ந்து, போராடும் அரசு மருத்துவர்களை உடனடியாக அழைத்துப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உயிர் காக்கும் பணியில் இருக்கும் மருத்துவர்கள் இது போன்று வேலை செய்ய மாட்டோம் என்ற போராட்ட முறையைக் கைவிட்டு, முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தி, தங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும்," என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x