Published : 25 Oct 2019 10:45 AM
Last Updated : 25 Oct 2019 10:45 AM
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் கடைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அதன் காரணமாக சென்னை தியாகராயநகர், பழைய வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.
சிறியவர்கள் முதல் பெரியோர் வரை உற்சாகமாகக் கொண்டாடும் தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி (நாளை மறுதினம்) கொண்டாடப்படுகிறது. வெளியூர்களில் இருந்து வந்து, சென்னையில் தங்கி வசிப்போர் அதிக அளவில் இருப்பதால், அவர்கள் இன்று மாலை சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையில், அவர்கள் புத்தாடைகள், பட்டாசுகளை வாங்கும் பணிகளை நேற்றே தொடங்கிவிட்டனர். அதனால் தியாகராயநகர் ரங்கநாதன் தெரு, பாண்டிபஜார், பனகல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு அதிக அளவில் பொதுமக்கள் படையெடுத்தனர். அதனால் அப்பகுதியில் இறுதிகட்ட வியாபாரம் களைகட்டியது.
அங்கு காலையில் கூட்டம் குறைவாக இருந்த நிலையில், மாலையில் கூட்டம் அலைமோதியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களுக்கு தேவையான ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்களை விரும்பிய கடைகளில் வாங்கிச் சென்றனர். பெரும்பாலும் செல்போன், ஜவுளி மற்றும் இனிப்பு கடைகளில்தான் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தியாகராயநகரில் அதிக அளவில் மக்கள் குவிந்ததால், பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ஒலிபெருக்கிகளில் அவ்வப்போது பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனைகளை போலீஸார் வழங்கி வந்தனர். மக்கள் கூட்டம் அலைமோதியதால் தியாகராயநகரின் பல்வேறு சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அங்கு புத்தாடை வாங்க வந்த தரமணியை சேர்ந்த அமுதா கூறும்போது, “தியாகராயநகரில் மட்டுமே விலை குறைவாகவும், அதிக டிசைன்களும் உள்ளன. அதனால் ஆண்டுதோறும் இங்கு வந்துதான் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வோம்” என்றார்.
பிரபல கடைகளின் உரிமையாளர்கள் சிலர் கூறும்போது, “வேட்டி, சேலை, பட்டு தாவணி உள்ளிட்ட பாரம்பரிய ஆடைகளுக்கு தற்போது மக்களிடம் மவுசு உயர்ந்துள்ளது” என்றனர்.
வட சென்னையில்...
வட சென்னையின் முக்கிய ஆடை வர்த்தக மையமாக பழைய வண்ணாரப்பேட்டை விளங்குகிறது. அங்குள்ள கடைகளில் நேற்று காலை முதலே அதிக அளவில் மக்கள் குவிந்திருந்தனர். மாலையில் எம்.சி. சாலையில் கட்டுக்கடங்காத வகையில் கூட்டம் அலைமோதியது. இப்பகுதிக்கு திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் அதிக அளவில் வந்திருந்தனர். பெரிய கடைகளுக்கு இணையாக சாலையோரக் கடைகளிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் புரசைவாக்கம், டவுட்டன், பெரம்பூர்- மாதவரம் நெடுஞ்சாலை, மூலக்கடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
தாம்பரத்தில்...
குரோம்பேட்டை, பள்ளிக்கரணையில் பெரிய கடைகள் அதிக அளவில் உள்ளன. பெரிய கடையில் துணி எடுத்தால் விலை குறைவாக இருப்பதுடன் ஏராளமான வடிவமைப்புகளில் நாம் விரும்பும் வகைகளில் ஆடைகள் கிடைக்கின்றன. துணிகள் மட்டுமின்றி தங்க நகைகள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்க முடியும். அதனால் அப்பகுதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. அதே நேரத்தில் தாம்பரத்தில் உள்ள கடைகளில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT