Published : 25 Oct 2019 09:37 AM
Last Updated : 25 Oct 2019 09:37 AM
சென்னை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இனிப்பகங்களில் விற்பனை அதிகரித்துள்ளது. சிறப்பு இனிப்புகள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
தீபாவளி பண்டிகை வரும் 27-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிக்கைக்கு ஒரு சில தினங்கள் மட்டுமே இருப்பதால் துணி, பட்டாசு உள்ளிட்டவற்றை வாங்குவதில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், இனிப்புகள் வாங்குவதிலும் அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இனிப்பகங்களில் லட்டு, பாதுஷா, மைசூர்பா, பால் வகையில் செய்யப்பட்ட இனிப்புகள் உள்ளிட்டவை வழக்கம் போல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுதவிர, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கருப்பட்டி இனிப்புகள்இதன்படி, கருப்பட்டி கத்லி, கருப்பட்டி பாதாம் அல்வா, கருப்பட்டி கேக், கருப்பட்டி கலகந்த், கருப்பட்டி கோதுமை அல்வா, கருப்பட்டி லட்டு, பாம்பே அல்வா, காஜூ கட்லி, காஜூ பிஸ்தா ரோல், ட்ரை புரூட் அல்வா, தீபாவளி மிக்சர் உள்ளிட்ட வகை இனிப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
எப்போதும் விற்பனை செய்யப்படும் சாதாரண இனிப்புகளைவிட சிறப்பு இனிப்புகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். இனிப்பகங்களில் ரூ.150 முதல் ரூ.1,050 வரையிலான விலையில் இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், அதிக விலையுள்ள இனிப்புகள் சிறிய துண்டுகளாக ரூ.20 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தீபாவளி நெருங்குவதால் நேற்று முன்தினம் மாலை முதல் இனிப்பகங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், ஒரு சில இனிப்பகங்களில் தீபாவளிக்காக சிறப்பு ஸ்டால்கள் அமைத்து இனிப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் மூலம் வழங்குவதற்காக மொத்தமாக கொள்முதல் செய்வதும் அதிகரித்து வருகிறது. இதனால், சென்னையில் பெரும்பாலான இனிப்பகங்களில் காலை முதல் இரவு வரை மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT