Published : 24 Oct 2019 05:45 PM
Last Updated : 24 Oct 2019 05:45 PM

நீர்நிலைகளைத் தூர்வார ரூ.8 கோடியில் ‘ஹைடெக்’ இயந்திரம்: சென்னையைப் போல் மதுரை மாநகராட்சியும் வாங்குகிறது

மதுரை

தமிழகத்திலே சென்னைக்கு அடுத்து மதுரை மாநகராட்சி, நீர்நிலைகளை விரைவாக தூர்வாருவதற்கும், ஆழப்படுத்தவும் ரூ.8 கோடியில் ‘ஹைடெக்’ தூர்வாரும் இயந்திரம் வாங்குகிறது.

இதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதால் ஓரிரு வாரங்களில் இந்த இயந்திரம் மதுரை வருகிறது.

தமிழகத்தில் தற்போது நீர்நிலைகளைத் தூர்வாரி மழைநீரை சேரிக்கும் விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. அரசு துறைகளும், அதற்கான நிதியை ஒதுக்கி தன்னார்வ அமைப்புகளுடன் கைகோர்த்து நீர்நிலைகளைத் தூர்வாரும் திட்டத்தை தொடங்கியுள்ளது. மதுரை மாநகராட்சியில் 10-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை மாநகராட்சி தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து தூர்வாரும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதில், இரண்டு நீர்நிலைகள் முழுவதும் தூர்வாரி, அதில் தண்ணீர் சேகரிக்கப்படுகிறது.

இந்நிலையில் மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள குளங்கள், ஊரணிகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை துரிதமாக தூர்வாருவதற்கு ரூ.8 கோடியில் ‘ஹைடெக்’ இயந்திரம் வாங்குகிறது. தற்பாது சென்னை மாநகராட்சியில் இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. 2-வது மாநகராட்சியாக மதுரை வாங்க உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் கூறுகையில், ‘‘தற்போது நீர்நிலைகளை படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள், செடிகள், திடக்கழிவுகள் மற்றும் இதரக் கழிவுகளை அகற்றுவதற்கு ஜே.சி.பி. மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த இயந்திரங்களைக் கரையிலோ, ரோட்டிலோ நிறுத்திதான் தூர்வார வேண்டியிருக்கிறது. அதனால், ஊரணிகள் மற்றும் கால்வாய்களில் உள்ளே சென்று தூர்வாருவது மிகவும் சிரமமாக இருப்பதுடன் வெள்ளம் ஏற்படும் சமயங்களில் அடைப்பு ஏற்படுவதை அகற்றுவதும் கடினமாக உள்ளது.

எனவே இவற்றிற்கு தீர்வு காணும் வகையில் நிலத்திலும், நீரிலும் சென்று தூர்வாரும் மற்றும் ஆகாயத்தாமரைகள், செடிகள், திடக்கழிவுகள் மற்றும் இதரக்கழிவுகளை அகற்றும் பணிக்கு புதிய ‘ஹைடெக்’ இயந்திரத்தை மாநகராட்சி ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் வாங்க உள்ளது.

இந்த இயந்திரத்திற்கான தொகையில் மாநகராட்சியின் பங்களிப்பாக 10 சதவீதமும், மீதமுள்ள 90 சதவீதம் அரசின் பங்களிப்புடன் வாங்குகிறது.

மதுரை மாநகராட்சியின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த அதிநவீன இயந்திரத்தை வாங்குவதற்கு மாநில உயர்நிலை அதிகாரிகள் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு அரசின் நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலம் மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் உள்ள மணல்களை அகற்றி தூர்வாரவும், நீர்நிலைகளை ஆழப்படுத்தவும், வெள்ளப்பெருக்கு நேரங்களில் மீட்புப் பணிக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x