Last Updated : 24 Oct, 2019 05:33 PM

 

Published : 24 Oct 2019 05:33 PM
Last Updated : 24 Oct 2019 05:33 PM

திமுக தோளில் சுமந்தும் நாங்குநேரியில் கரை சேராத காங்கிரஸ்: அதிமுகவின் வெற்றிக்கான காரணிகள் என்ன?

அதிமுக வெ.நாராயணன் (இடது), காங்கிரஸின் ரூபி மனோகரன் (இடது) - படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் திமுக தோளில் சுமந்தும் காங்கிரஸ் கரைசேரவில்லை.

கடந்த சட்டப் பேரவை, மக்களவை தேர்தல்களில் அதிக வாக்குகளை பெற்றிருந்த நிலையில் இம்முறை பல்வேறு காரணங்களால் அதிமுகவின் அரசுர பலத்துக்கு காங்கிரஸால் ஈடுகொடுக்க முடியவில்லை.

நாங்குநேரி தொகுதியில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளதால் காங்கிரஸ் கட்சி தமிழக சட்டப் பேரவையில் ஓரிடத்தை இழக்க நேரிட்டிருக்கிறது. இத் தொகுதியில் ஆளுங்கட்சி போட்டியிடும் நிலையில் எதிர்த்து திமுகவே களம் காணவேண்டும் என்று அக் கட்சியினர் எதிர்பார்த்திருந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு இத் தொகுதி ஒதுக்கப்பட்டது.

ஆனாலும் திமுக துணைபொதுசெயலாளர் ஐ. பெரியசாமி தலைமையில் தேர்தல் பணிக்குழுவை அமைத்து தேர்தல் களப்பணியில் திமுக கடைசிவரை தீவிரமாக ஈடுபட்டிருந்தது.

அதிமுக அமைச்சர்கள் 15 பேர் தொகுதியில் முகாமிட்டிருந்ததுபோல் திமுக தரப்பிலும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் என்றும் பலரும் இங்கு முகாமிட்டு தேர்தல் பணியில் மும்முரம் காட்டியிருந்தனர்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இத் தொகுதியில் 4 நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோதெல்லாம் கட்சி நிர்வாகிகளை அழைத்துபேசி சுறுசுறுப்பாக பணியாற்ற பணித்து சென்றிருந்தார். காங்கிரஸாரின் களப்பணியில் காணப்பட்ட தொய்வு குறித்து அப்போதே திமுகவினர் புகார் தெரிவித்திருந்தனர்.

தேர்தல் களத்தில் காங்கிரஸை தோளில் சுமந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும் தங்கள் தலைவரிடம் திமுக நிர்வாகிகள் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர். ஆனாலும் ஆளுங்கட்சி மீதான அதிருப்தியை அறுவடை செய்ய வேண்டும் என்று திமுகவினருக்கு கட்சி தலைமை கட்டளையிட்டிருந்தது. அதன்படியே திமுகவினரும் பணியாற்றியிருந்தனர். ஆனாலும் காங்கிரஸ் கரைசேரவில்லை.

கடந்த மக்களவை தேர்தலில் இத் தொகுதியில் மட்டும் திமுக எம்.பி. ஞானதிரவியம் 34 ஆயிரம் அதிகமாக வாக்குகளை பெற்றிருந்தார். இதுபோல் கடந்த 2016 சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக வெற்றிபெற்ற எச். வசந்தகுமார் அதிமுக வேட்பாளரைவிட 17315 வாக்குகள் அதிகமாக பெற்றிருந்தார். ஆனால் இடைத்தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது.

காங்கிரஸின் தோல்விக்கு பல்வேறு காரணங்களை கூட்டணி கட்சியினர் தெரிவிக்கிறார்கள். இத் தொகுதியில் 25 ஆயிரத்துக்கு அதிமான வாக்குவங்கியை கொண்டபட்டியலினத்தை சேர்ந்தவர்கள் வாக்குப்பதிவை புறக்கணித்திருந்தனர். சிஎஸ்ஐ கிறிஸ்தவ நாடார் சமுதாயத்தை சேர்ந்த 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறுவதில் கடைசிநேரத்தில் அதிமுக திறம்பட காய்களை நகர்த்தியிருந்தது.

பிரச்சாரத்துக்கு வந்திருந்த முதல்வர் பழனிசாமியை சிஎஸ்ஐ சபையை சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்ததும், அதை தொடர்ந்து கடைசி நேரத்தில் அந்தந்த பகுதிகளில் அச் சபை நிர்வாகிகளின் களப்பணியும், அதிமுகவுக்கு பலம் சேர்த்திருப்பது தேர்தல் முடிவுகளில் எதிரொலித்துள்ளது.

அதிமுக சார்பில் உள்ளூர் வேட்பாளராக வி. நாராயணன் களமிறக்கப்பட்டது அக் கட்சிக்கு பலமாக இருந்தது. முதல்வரது பிரச்சாரத்தில் இதையே அழுத்தமாக அவர் வலியுறுத்தி சென்றிருந்தார்.

இந்தத் தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தல், இதற்கு காரணமானவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று அவர் பேசியது மக்கள் மத்தியில் எடுபட்டிருக்கிறது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் கடந்த மூன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றாத பணிகளை ஒன்றரை ஆண்டுகளி்ல நிறைவேற்ற முடியும்.

மக்களது குறைகளை உடனுக்குடன் அவரிடம் தெரிவிக்க முடியும் என்ற பலமான பிரச்சாரத்துக்கு ஆதரவு பெருகியிருக்கிறது. தொகுதியில் முகாமிட்டிருந்த 15 அமைச்சர்களும் இடைவிடாது மக்களை சந்தித்து களப்பணியாற்றியிருந்தனர்.

அதிலும் அந்தந்த சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அச்சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்களை களப்பணியில் அதிமுக இறக்கியிருந்தது.

இத் தேர்தலில் வெற்றி தோல்விக்கு பணபலமும் முக்கிய காரணியாக இருந்தது. இனிவரும் தேர்தல்களில் பணபலம் படைத்தவர்களே களத்தில் போட்டியிட முடியும் என்ற நிதர்சனமும் வெளிப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x