Last Updated : 24 Oct, 2019 11:25 AM

1  

Published : 24 Oct 2019 11:25 AM
Last Updated : 24 Oct 2019 11:25 AM

தமிழக அரசின் பழிவாங்கல் நடவடிக்கைக்கு நடிகர் விஜய் அஞ்சக் கூடாது: சீமான் பேட்டி

தூத்துக்குடி

"நடிகர் விஜய் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதற்கு வன்மம் வைத்துக் கொண்டு தான் தமிழக அரசு பழிவாங்குகிறது" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (அக்.24) காலை தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார்.

தொடர்ந்து அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில், "நடிகர் விஜய் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதற்கு வன்மம் வைத்துக் கொண்டு தான் தமிழக அரசு பழிவாங்குகிறது. விஜய் பேசிய கருத்துக்கு எதிர் கருத்துக்களை பலரும் தெரிவித்துவிட்டார்கள்.

அதன் பின்னரும் பழிவாங்கும் நோக்கத்தோடு படத்துக்கு இடையூறு செய்வது நன்றாக இருக்காது. இதனால் இன்றைய தலைமுறையினருக்கு ஜனநாயகத்தின் மீது வெறுப்பு உண்டாகிவிடும்.

செல்வாக்கு பெற்ற கலைஞர்கள் சொல்வது சமூகத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது இதனால் அதிகாரத்தினர், அவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்றுகிறார்கள். அச்சுறுத்தப் பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் நடிகர் விஜய் அஞ்சக்கூடாது" என்றார்.

காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது குறித்து கேட்டதற்கு, "அது அதிகாரத்தின் வலிமை. அதிகாரத்திலுள்ள திமிரில் செய்வது" என்றார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சை பேச்சு குறித்து கேட்கையில், "அமைச்சர் கவனமாக பேசியிருக்கவேண்டும். மதம் என்பது மாறிக் கொள்ளக் கூடியது. ஆனால் இனம் என்பது மாறமுடியாது. அமைச்சர் என்பவரும் கண்ணியத்தோடும் கட்டுப்பாடும் பேசவேண்டும். வாக்கு செலுத்தியவர்கள், செலுத்தாதவர்கள் என எல்லோருக்கும் சேர்த்து தான் அவர் அமைச்சர். எனவே அவர் அப்படி பேசியிருக்க கூடாது" என்றார்.

கோதுமை, பார்லி உள்ளிட்ட பொருளுக்கு அகவிலை உயர்த்தப்படுவது குறித்த கேள்விக்கு, "ஏழை,எளிய மக்களுக்கு எதுவுமே ஏற்புடையதல்ல. வரிவிதிப்பு, நாட்டை குட்டிச் சுவராக்கி விட்டது. வரி விதிப்புக்கு எதிராக நாங்கள் போராடியபோது தேசத்துரோகி என்று கூறினார்கள்.

வாங்கும் திறனற்ற மக்களாக நம்மை மாற்றிவிட்டார்கள். பண்டிகை நாட்களில் 200 விழுக்காடு விற்பனையான இடத்தில் தற்போது 80 விழுக்காடு தான் விற்பனையாகிறது.

அடித்தட்டில் உள்ள 60 விழுக்காடு மக்களை பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை. பெரும் முதலாளிகளின் நலன் கருதியே இவர்கள் செயல்படுவார்கள். ஆகவே கோதுமை,பார்லி விலை உயர்வை பற்றி நாமெல்லாம் சிந்திக்கவே முடியாது.

ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது களையப்பட வேண்டும். மனிதர்கள் எல்லோரும் சமமென்பது கல்வியில் இருந்தே நாம் கற்பித்து வர வேண்டும் அதை நோக்கி அரசு செல்ல வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x