Published : 03 Jul 2015 10:32 AM
Last Updated : 03 Jul 2015 10:32 AM

சீன பட்டுக்கூடுகள் இறக்குமதி குறைந்தது: தமிழக பட்டுக்கூடுகளுக்கு சந்தைகளில் மீண்டும் வரவேற்பு

சீன பட்டுக்கூடுகள் வருகை குறைந் ததால் மீண்டும் தமிழக பட்டுக் கூடுகளுக்கு சந்தைகளில் வர வேற்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிகளவு வெண் பட்டுக்கூடு உற்பத்தியாகிறது. தமி ழகத்தில் திண்டுக்கல், ஓசூர், சேலம், தென்காசி, உடுமலைப்பேட்டை, தருமபுரி, வேலூர், ஆரணி, திருப் பூர், தேனி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் விவசாயிகள் அதிகளவில் வெண்பட்டுக் கூடு களை உற்பத்தி செய்கின்றனர். தமிழகத்தில் தற்போது பட்டுக்கூடு உற்பத்தி சீசன் தொடங்கி உள்ளது. ஜூன் முதல் ஆகஸ்ட், செப்டம்பர் வரையிலான இந்த சீசனில்தான் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

பட்டுப்புழுவின் உமிழ்நீர் திர வமே பட்டு நூலாக மாறுகிறது. அதனால், பட்டுக்கூடு உற்பத்தி தொழிலில் பட்டுப்புழு வளர்ப்பு மிக முக்கியமானது. இளம் புழுக் களுக்கு அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் தேவைப்படுகிறது. அதாவது, 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், 85 சதவீதம் ஈரப்பதமும் தேவைப்படுகிறது. பெரிய புழுக்களுக்கு குறைந்த வெப்பநிலை, குறைந்த ஈரப்பதம் தேவைப்படுகிறது.

அதாவது, 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், 75 சதவீதம் ஈரப்பதமும் போது மானவை. இந்த சீதோஷண நிலை யில் புழுக்களை வளர்த்தால் மட் டுமே தரமான பட்டுக்கூடுகளை விவசாயிகள் உற்பத்தி செய்ய முடியும்.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு களாக பருவமழை இல்லை. அதனால், வறட்சியில் 40 சதவீதம் மல்பரி சாகுபடி பரப்பு குறைந்து, பட்டுக்கூடுகள் உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது. இந்த ஆண்டு கோடை யில் வழக்கத்துக்கு மாறான பருவ நிலை பட்டுப்புழு வளர்ப்புக்கு உகந்ததாக இல்லை. அதனால், பட்டுப்புழுக்கள் தரமான பட்டுக் கூடுகளை உற்பத்தி செய்ய வில்லை. மேலும், இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் சீனாவில் இருந்து அதிகளவு பட்டுக்கூடுகள் இறக்குமதி செய்யப்பட்டன. இந் திய பட்டுக்கூடுகளை ஒப்பிடும் போது, சீன பட்டுக்கூடுகள் தரமாக இருந்ததால், தமிழக பட்டுக்கூடுகள் வரவேற்பை இழந்து விலை வீழ்ச்சி அடைந்தது.

இந்நிலையில், விவசாயிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால், சீனப் பட்டுக்கூடுகள் இறக்குமதி தற் போது குறையத் தொடங்கியது. மீண்டும் சந்தைகளில் தமிழக பட்டுக்கூடுகளின் விலை அதிக ரிக்கத் தொடங்கியுள்ளது.

அதனால், ஒரு கிலோ வெண் பட்டுக்கூடுகள் தற்போது ரூ.360 ஆக விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து விலை உயர வாய்ப்புள்ளதால் விவசாயி கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பலவீனமடைந்த பட்டுப்புழுக்கள்

பட்டு வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ‘‘சில மாவட்டங்களில் தற்போது அதிக வெப்பநிலை காணப்படுகிறது. அதிக ஈரப்பதம் இல்லை. சில மாவட்டங்களில் மழை பெய்வதால், அதிக ஈரப்பதம் இருக்கிறது. வெப்பநிலை இருப்பதில்லை.

அதனால் முதிர்ந்த புழுக்கள் பாதிக்கப்படுகின்றன. கைதேர்ந்த விவசாயிகள் பட்டுப்புழுக்கள் வளர்ப்பிலாவது செயற்கையாக புழுக்களுக்கு ஏற்ற சீதோஷண நிலையை உருவாக்கி கொள்வார்கள். ஆனால், மல்பரி இலையில் ஈரப்பதம் சரியான விகிதத்தில் இல்லாதபட்சத்தில், புழுக்கள் வேகமாக வளர்ச்சி அடையாது. ஈரப்பதத்தை அதிகரிக்கச் செய்யும்பட்சத்தில், பட்டுப்புழுக்கள் வாயில் இருந்து வெளிப்படும் பட்டு இழையானது சரிவர உலராது. ஒன்றுடன் ஒன்று இணைந்து கடினப்பட்டு நூற்புக்கு இடையூறாக அமையும்.

வழக்கத்துக்கு மாறான மழைக் காலத்தில் அதிகரிக்கும் ஈரப்பதத்தினால் பட்டுப்புழு கூடு கட்டும் நிலையில் வெளியேற்றும் அதிகளவு சிறுநீரினால் மூத்திரக்கூடுகள் அதிகரிக்கும். இவை சரிவர நூற்பாகாது. ஈரப்பதம் கூடுகளின் நிறத்தை மங்கச் செய்யும்.

அதனால், பட்டுக்கூடுகளின் தரம் குறைவதுடன் எதிர்பார்த்த விலையும் கிடைக்காது. தற்போது சீனப்பட்டுக்கூடுகள் வருகை குறைந்ததால் தற்காலிகமாக தமிழக பட்டுக்கூடுகள் விலை உயரத்தொடங்கியுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x