Published : 24 Oct 2019 09:08 AM
Last Updated : 24 Oct 2019 09:08 AM
புதுச்சேரி
புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் தொகுதியில் பதிவான வாக்குகள் மூன்று சுற்றுகளாக எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றார்.
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் சார்பாக புவனேஸ்வரன், நாம் தமிழர் கட்சி சார்பாக பிரவீணா, மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் சார்பாக வெற்றிச்செல்வன் உட்பட 9 பேர் போட்டியிட்டனர்.
இத்தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 35,009. 17,047 ஆண் வாக்காளர்களும், 17,961 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளரும் உள்ளனர். கடந்த 21-ம் தேதி நடந்த வாக்குப்பதிவின்போது 69.44 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. அதாவது 24 ஆயிரத்து 310 பேர் வாக்களித்து இருந்தனர். அதில் ஆண் வாக்காளர்கள் 11 ஆயிரத்து 695 பேர். பெண் வாக்காளர்கள் 12 ஆயிரத்து 614 பேர். 3-ம் பாலின வாக்காளர் ஒருவர் வாக்களித்து இருந்தனர்.
இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பதிவான வாக்குகள் மூன்று சுற்றுகளாக எண்ணப்பட்டன. ஒருமணி நேரத்திலேயே வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்தது. காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 14,782 வாக்குகள் பெற்றார். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 7,612 வாக்குகள் பெற்றார்.
என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை விட 7,170 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றார்.
யார் இந்த ஜான்குமார்?
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் ஜான்குமார். அதையடுத்து காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் வேளையில் நாராயணசாமி முதல்வராகத் தேர்வானார். அதையடுத்து அவர் போட்டியிட நெல்லித்தோப்பு தொகுதி எம்எல்ஏ ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்தொகுதியில் நாராயணசாமி வென்றார். அதைத்தொடர்ந்து அமைச்சருக்கு இணையான டெல்லி பிரதிநிதி பதவியும் ஜான்குமாருக்குத் தரப்பட்டது. ரியல் எஸ்டேட், கேபிள் டிவி, சுற்றுலா ஏற்பாட்டாளர் என பல தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.
ஏற்கெனவே நெல்லித்தோப்பு தொகுதியில் நிலை நிறுத்திக்கொள்ள பல்வேறு முயற்சிகளை ஜான்குமார் தொடர்ந்து செய்து வந்தார். வரவுள்ள 2021-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் நெல்லித்தோப்பில் ஜான்குமார் போட்டியிடும் முடிவிலேயே இருந்தார். இச்சூழலில் டெல்லி பிரதிநிதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, காமராஜர் நகர் தொகுதியில் வேட்பாளராக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதற்கு முழு முயற்சியும் முதல்வர் நாராயணசாமி என்று காங்கிரஸ் தரப்பினர் வெளிப்படையாகவே பேசினர். காங்கிரஸ் தரப்பில் தொடர் பிரச்சாரத்தில் முதல்வர் நாராயணசாமி அதிக அளவு கவனம் செலுத்தினார்.
இந்நிலையில் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment