Published : 23 Oct 2019 04:25 PM
Last Updated : 23 Oct 2019 04:25 PM

பள்ளி மாணவர்களுக்கு குடைகளை இலவசமாக வழங்கிய முன்னாள் மாணவர்: திண்டுக்கல்லில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

விஜயகுமார் இடமிருந்து வலமாக கடைசியில் வெள்ளை வேட்டி கட்டி நிற்கிறார்.

திண்டுக்கல்

மழைக்காலத்தில் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்குச் சென்றுவர வசதியாக முன்னாள் மாணவர் ஒருவர் 50-க்கும் மேற்பட்ட குடைகளைக் கொடையாக வழங்கி பள்ளி மாணவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள அம்மையநாயக்கனூர் அரசு தொடக்கப்பள்ளிக்குதான் அவர் இந்த நன்கொடையை வழங்கியுள்ளார்.

இந்தப் பள்ளியில் அம்மையநாயக்கனூரைச் சுற்றியுள்ள கிராமங்களான கொடைரோடு, சிறுமலை அடிவாரம் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

தற்போது மழைக்காலம் என்பதால் மாணவர்கள் பள்ளிக்கு நடந்துவரும் நேரத்தில் மழை பெய்தால் கடும்சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனை அறிந்த அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் விஜயகுமார் இப்போதைய மாணவர்களுக்காக 50 குடைகளைப் பரிசாக வழங்கியுள்ளார்.

விஜயகுமார் தற்போது கொடைரோட்டில் சொந்தமாக தொழில்செய்துவருகிறார்.

ஓரளவு பொருளாதார தன்னிறைவு பெற்ற அவர் தான் படித்த அரசுப் பள்ளி மாணவர்கள் மழையில் சிரமப்படுவதைக் கண்டு 50 குடைகளையும் வாங்கிக்கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளார்.

பள்ளி தலைமையாசிரியர் ஆர்தரிடம் தான் அங்கு படித்த விவரத்தைக் கூறி முறையாக அனுமதி பெற்று குழந்தைகளுக்கு வண்ணமயமான குடைகளை வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

முன்னாள் மாணவர் விஜயகுமாரின் இந்த செயலை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.

வண்ண வண்ண குடைகளுடன் சின்னஞ்சிறுப் பிள்ளைகள் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தது ஆசிரியர்களையும் பெற்றோரையும் நெகிழச் செய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x