Published : 23 Oct 2019 03:39 PM
Last Updated : 23 Oct 2019 03:39 PM
தூத்துக்குடி
தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச்சென்ற தோணி நடுக்கடலில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 9 மாலுமிகள் மீட்கப்பட்டு தூத்துக்குடி கொண்டுவரப்பட்டனர்.
தூத்துக்குடி பழைய துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு, மாலத்தீவு உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இந்திய பொருட்கள் தோணி மூலம் கொண்டு செல்லப்படும்.
சிறிய வகை கப்பல் போன்ற இந்த தோணி நடுக்கடலில் செல்லும் போது வேகத்தை அதிகரிப்பதற்காக அதிலுள்ள பாய் விரிக்கப்பட்டு தோணி செலுத்தப்படும். கடந்த 19-ம் தேதியன்று தூத்துக்குடியிலிருந்து ஆர்க் ஆப் கார்டு என்ற தோணி வெங்காயம், சில கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு மாலத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றது.
மாலுமி ஜெயசந்திரன் தலைமையில் ஒன்பது பேர் தோணியில் பயணம் செய்தனர். பயணத்திட்டப்படி இத்தோணியானது 22-ம் தேதி மாலத்தீவு சென்று சேரவேண்டும். இந்நிலையில் 21ம் தேதி நள்ளிரவு 3 மணியளவில் இத்தோணி மாலத்தீவிலிருந்து வடக்கே 116 கடல் மைல் தொலைவில் சென்ற போது நடுக்கடலில் கனமழை மற்றும் காற்றின் வேகத்தினால் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. அப்போது கடல் அலையில் தோணி சரக்குடன் கடலில் மூழ்கியது.
அதில் சென்ற ஜெயச்சந்திரன், ஜோசப் லினஷ், சுரேஷ், டேவிட் ராஜா, உல்சடன் கிளைட்டன், ராஜேஷ், செல்வம், விஜிலேஷ், மைக்கேல் உள்ளிட்ட ஒன்பது மாலுமிகள் செய்வதறியாது திகைத்த நிலையில் அந்த பகுதியில் சிறிது தூரத்தில் தூத்துக்குடி நோக்கி பயணித்த வி.பி.பிராக்கிரஸ் என்ற கப்பல் மாலுமிகள் கடலில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை ஒவ்வொருவராக காப்பாற்றி மீட்டனர்.
இதைத்தொடர்ந்து மீட்கப்பட்ட ஒன்பது பேரும் இந்த தோணியில் இன்று(அக்.23) தூத்துக்குடி பழைய துறைமுகம் வந்தடைந்தனர். அவர்களிடம் விசாரணை செய்யப்பட்டு கடலோர காவல் குழுமத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தொடர்ந்து அவர்களிடம் காவல் துறையினர், வெளியுறவுth துறையினர் விசாரணை செய்து பின்னர் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT