Published : 23 Oct 2019 02:08 PM
Last Updated : 23 Oct 2019 02:08 PM
சென்னை
அடுத்து வரும் இரு தினங்களுக்கு வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் குறைவாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று (அக்.23) செய்தியாளர்களைச் சந்தித்த பாலச்சந்திரன், "நேற்று மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது சற்று வடக்கு திசையில் நகர்ந்து தற்போது மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆந்திரக் கடல் பகுதியில் நிலவுகிறது.
அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது தொடர்ந்து நிலவுகிறது. இது அடுத்து வரும் 24 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்து வரும் இரு தினங்களைப் பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழையைப் பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணிநேரத்திற்கு டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
தற்போதையை நிலவரப்படி, வடகிழக்குப் பருவமழையானது அடுத்து வரும் இரு தினங்களுக்கு குறைவாகக் காணப்படும்.
அக்.1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையின் அளவு 130 மி.மீ. இந்த காலகட்டத்தின் இயல்பு அளவு 126 மி.மீ. இது இயல்பை விட 3 சதவீதம் அதிகம்" என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT