Published : 22 May 2014 05:42 PM
Last Updated : 22 May 2014 05:42 PM
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்தற்காக கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்ட 14 இலங்கை மீனவர்களை ஜூன் 4 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க பரமக்குடி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மீன்களின் இனப்பெருக்கத்துக்காக தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் மீன்பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை நாட்டு மீனவர்கள் சிலர் இரு படகுகளில் கன்னியாகுமரி அருகேயுள்ள கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருப்பதாக இந்திய கடற்படையினருக்கு தகவல் வந்தது.
அதனைத் தொடர்ந்து, இந்திய கடற்படை வீரர்கள் மூன்று இலங்கை படகுகளை சுற்றி வளைத்து 14 மீனவர்களை கைது செய்து தூத்துக்குடியிலுள்ள தமிழக கடலோர காவல்படையிடம் செவ்வாய்கிழமை இரவு ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட 14 மீனவர்களும் பேரும் இலங்கையில் உள்ள நீர்க்கொழும்பு மற்றும் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் இதில் சுப்பிரமணியன் தர்மராஜ் என்பவர் மட்டும் தமிழர் எனவும், மற்ற 13 பேர்களும் சிங்கள மீனவர்கள் எனவும் தெரிய வந்தது.
பரமக்குடி நீதிமன்றத்தில் இன்று 14 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை விசாரித்த நீதிபதி ஜீன் 4 வரையிலும் நீதிமன்ற காவலில் அடைக்க உத்திரவிட்டார். இதனைத் தொடர்ந்து 14 மீனவர்களும் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT