Published : 22 Oct 2019 09:01 PM
Last Updated : 22 Oct 2019 09:01 PM
கோவை
ரெஃப்ரிஜிரேட்டர் பின்புறம் தேங்கும் தண்ணீரிலும் டெங்கு கொசுக்கள் வளர வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் டெங்குக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. 3900 பேர் டெங்குக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் இன்று பேட்டியில் தெரிவித்துள்ளார். சுத்தமான நீரில்தான் டெங்குக்காய்ச்சலை உருவாக்கும் ஏடிஎஸ் வகை கொசுக்கள் வளர்கிறது. ஆகவே மழைக்காலம் உள்ள நேரத்தில் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள பொருட்களை அகற்ற வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
டயர்கள், சிமெண்ட் தொட்டிகள், தேங்காய் ஓடுகள், குடம், வாளி, காலி பெயிண்ட்டப்பாக்கள், அலங்கார செடி வளர்க்கும் தொட்டிகள், பிளாஸ்டிக் தட்டுகள், கப்கள், திறந்த நீர்தொட்டி, டிரம்களில்தேங்கியுள்ள நீரில் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
எனவே, பயன்படுத்தாத பழைய பொருட்களில் தண்ணீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இதுதவிர, பல இடங்களில் ரெஃப்ரிஜிரேட்டர் பின்புறம் உள்ள உபரி நீரை தேக்கி வைக்கும் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவது சுகாதாரத்துறையினரின் ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் பி.ஜி.பானுமதி கூறியதாவது: ”சிறிய இடத்தில் நல்ல தண்ணீர் தேங்கினாலும் ஏடிஎஸ் கொசுக்கள் அதில் முட்டையிட்டு விடும். ரெஃப்ரிஜிரேட்டரின் பின்பக்கத்தில் தண்ணீர் வடியும் டிரே இருக்கும். அதை கழற்றி அவ்வப்போது சுத்தம் செய்யாமல் தண்ணீர் தேங்குவதால், அதில் ஏடிஎஸ் கொசுக்கள் முட்டையிடுகின்றன.
எப்படி ஏடிஸ் கொசு வருகிறது எவ்வாறு சுத்தம் செய்யலாம்:
இதன்மூலமாகவும் டெங்கு காய்ச்சல் பரவலாம். பலருக்கு இதுபற்றி தெரிவதில்லை. தங்களுக்கு தெரியாமலேயே டெங்கு கொசுவை வீட்டுக்குள் அவர்கள் உற்பத்தி செய்கின்றனர். எனவே, வீட்டுக்கு வெளியே சுத்தம் செய்வதோடு மட்டுமல்லாமல் வீட்டின் உள்ளே இருக்கும் ரெஃப்ரிஜிரேட்டரின் டிரேவையும் சுத்தம் செய்ய வேண்டும். டிரேவை பிரஷ் வைத்து தேய்த்தபின் சோப்பு போட்டு கழுவி வெயிலில் காய வைக்கவேண்டும்.
மீண்டும் டிரேவை மாட்டியவுடன் 2 டீஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய்யை டிரேவில் ஊற்றிவிடலாம். எண்ணெய் இருப்பதால் கொசுவுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்காது. இதனால், உற்பத்தி தடுக்கப்படும். ஏடிஎஸ் கொசுவின் ஆயுட்காலம் 21 நாட்கள். முட்டையில் இருந்து 10 நாட்களில் முழு அளவில் கொசு வளர்ந்து விடும்.
ஒரே ஒரு பெண் கொசு 150 முட்டைகள் வரை இடும். இந்த கொசுக்கள் பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும். எனவே, குழந்தைகளை கொசு வலைகளுக்குள் தூங்க வைக்கவேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT