Published : 22 Oct 2019 02:24 PM
Last Updated : 22 Oct 2019 02:24 PM
தூத்துக்குடி
'பிகில்' உள்ளிட்ட எந்தத் திரைப்படத்திற்கும் தீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. விதியை மீறி ஒளிபரப்பினால், அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரித்துள்ளார்.
கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
மது விற்பனைக்கு அரசே இலக்கு நிர்ணயிக்கிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளாரே?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன் ஆகியோர் உடல் நிலை பாதிக்கப்பட்டபோது அரசு மருத்துமனையில்தான் சிகிச்சை பெற்றனர். அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற காரணத்தினால்தான் மூத்த தலைவர்கள் அங்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இது முத்தரசனுக்குத் தெரியாதா? அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
பருவகால மாற்றத்தினால் டெங்கு போன்ற காய்ச்சல் போன்ற நோய்கள் வருவது இயற்கை. அதை அரசு எவ்வாறு சமாளிக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். வராமல் தடுப்பது நம் கையில் இல்லை. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது தவிர, மக்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிடக் கூடாது.
மதுவிலக்கை ரத்து செய்து மதுவைக் கொண்டுவந்தது திமுக. முத்தரசன் போன்றோர் திமுக கூட்டணியில் இருந்துகொண்டு இப்படிப் பேசக்கூடாது.
தீபாவளிக்கு வெளியாக உள்ள ‘பிகில்’ திரைப்படத்திற்காக சிறப்புக் காட்சிக்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதே?
‘பிகில்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி எதுவும் வழங்கவில்லை. தீபாவளிக்குத் திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. அதை மீறி சிறப்புக் காட்சிகள் மற்றும் அதிக கட்டணம் வசூல் செய்தால் அரசு பொறுப்பேற்காது. அதையும் மீறி அந்தப் படத்தை அரசு அனுமதிக்காத நேரத்தில் திரையரங்கில் திரையிட்டால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தயங்காது.
அரசு அனுமதி அளிக்காத நேரத்தில் காட்சி ஒளிபரப்பு செய்தால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலளித்தார்.
இதற்கிடையே அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம், ‘பிகில்’ திரைப்பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா? என தனியார் தொலைக்காட்சி கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த அவர், ''தீபாவளிக்கு ‘பிகில்’ உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கும் அரசு சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை. அதிகப்படியான கட்டணத்தில் டிக்கெட் விற்கமாட்டோம் என்று உறுதி அளித்துள்ளனர்.
அதைக் கட்டுப்படுத்துவது அரசின் கடமை. இனி எந்த திரைப்படத்துக்கும் தீபாவளி சிறப்புக் காட்சி என்பது கிடையாது. அதையும் மீறி சிறப்புக் காட்சிகள் மூலம் திரையிட்டால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். படத்தை வெளியிட்ட திரையரங்கின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிக விலைக்கு டிக்கெட் விற்பனையில்லை என உறுதியளித்தால் சிறப்பு காட்சியை அனுமதிக்க பரிசீலிக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT