Published : 21 Oct 2019 06:49 PM
Last Updated : 21 Oct 2019 06:49 PM
கல்கி சாமியார், அவரது மகன் கிருஷ்ணா தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. இதுவரை நடத்திய சோதனையில் ரூ.409 கோடி மதிப்புள்ள ரசீதுகள் , பல கோடி மதிப்புள்ள ரொக்கப் பணம், அமெரிக்க டாலர்கள், தங்க வைர நகைகள், ஹவாலா பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்படன. இது குறித்த விவரங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தைத் தலைமையிடமாகக்கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. அம்மா பகவான், ஸ்ரீ பகவான் என அழைக்கப்படும் விஜயகுமார் என்பவர் இந்த ஆசிரமத்தை நிறுவினார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்கள் உள்ள நிலையில் சென்னையில் மட்டும் 20 கிளைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
சித்தூர் அருகே நத்தம் என்னும் இடத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் கல்கி ஆசிரமம் உள்ளது. இங்கு தியான வகுப்புகள் கட்டணத்துடன் நடத்தப்படுகின்றன. கடந்த 3 நாட்களுக்கு முன் நாடு முழுவதும் உள்ள கல்கி ஆசிரமம் மற்றும் ஸ்ரீ பகவானின் மகன் என்.கே.வி. கிருஷ்ணா நடத்திவரும் நிறுவனங்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டில் ஈடுபட்டனர்.
முதலீடுகள், பங்குதாரர்கள் குறித்தும் வெளிநாட்டு முதலீடுகள் குறித்தும் சோதனை நடத்தப்பட்டது. சோதனை நிறைவுற்றதாகத் தெரிவித்துள்ள வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த விவரம் வருமாறு:
கல்கி சாமியாரின் மகன் வீடு, அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ.44 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறை 5 நாள் சோதனையில் 90 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.20 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள், கணக்கில் மறைக்கப்பட்ட மூலதனம் ரூ.61 கோடி கண்டுபிடிக்கப்பட்டது.
ஹவாலா மூலம் வெளிநாடுகளில் ரூ.85 கோடி முதலீடு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. நிறுவனங்களின் வட்டி வருவாயான ரூ.90 கோடியை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாமியார் குடும்பம் வெளிநாடுகளில் சொத்து குவித்துள்ளதற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...