Published : 21 Oct 2019 02:58 PM
Last Updated : 21 Oct 2019 02:58 PM
நாங்குநேரி
நாங்குநேரி இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ள 113 கிராம மக்களும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலையும் புறக்கணிப்போம் என திட்டவட்டமாகக் கூறுகின்றனர்.
நாங்குநேரியின் பாளை ஒன்றியம், களக்காடு ஒன்றியம், நாங்குநேரி ஒன்றியம் ஆகிய 3 ஒன்றியங்களுக்கு உள்ளிட்ட 113 கிராமங்களைச் சேர்ந்த பட்டியிலன மக்கள், பட்டியல் இனத்தைச் சேர்ந்த 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வலியுறுத்தி தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.
இது குறித்து புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தெற்கு நெல்லையப்பர் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த உய்க்காட்டான் கூறும்போது, "எங்களது கோரிக்கையை ஏற்கும்வரை நாங்கள் எந்தத் தேர்தலிலும் வாக்களிக்கப்போவதில்லை. பட்டியல் இனத்தைச் சேர்ந்த 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும் என்பது எங்களின் நீண்ட கால கோரிக்கை. ஆனால், அதற்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. ஏற்கெனவே தேர்தலுக்கு முன்னரே நாங்கள் எச்சரித்தும்கூட எங்களின் கோரிக்கைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனால், இன்று புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கிறோம். இனியும் இதே நிலை தொடர்ந்தால் உள்ளாட்சித் தேர்தலையும் புறக்கணிப்போம்" என்றார்.
தெற்கு நெல்லையப்பர் வாக்குச்சாவடியில் மொத்தம் 806 வாக்குகள். இவற்றில் 270 வாக்குகள் மட்டுமே பதிவாகின. பதிவான வாக்குகள் அனைத்தும் மற்ற சமூகத்தினரின் வாக்குகள் எனக் கூறப்படுகிறது.
ஆளுங்கட்சி மவுனத்தின் பின்னணி..
இடைத்தேர்தலைப் புறக்கணித்தாலாவது தங்கள் மீது அரசின் கவனம் திரும்பும் என மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், சமாதானம் பேச ஆளுங்கட்சி சார்பில் யாரும் வரவில்லை. இதுகுறித்து விசாரித்ததில், ஏற்கெனவே அதிருப்தியில் இருக்கும் மக்களை கெஞ்சி, வாக்குறுதி கொடுத்து வாக்களிக்க அழைத்தாலும்கூட பெரும்பாலானோர் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கவே வாய்ப்பிருக்கிறது.
அதனால், புறக்கணிப்பாளர்களை அவர்கள் போக்கிலேயே விட்டுவிட்டால் காங்கிரஸ் ஆதரவு வாக்குகளைக் கட்டுப்படுத்தலாம் என கணக்குப் போட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
மதியம் 1 மணியளவில் 41.34% வாக்குகள் பதிவாகியிருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT