Last Updated : 21 Oct, 2019 11:41 AM

1  

Published : 21 Oct 2019 11:41 AM
Last Updated : 21 Oct 2019 11:41 AM

நாங்குநேரி இடைத்தேர்தல்: காலை 11 மணிக்கு 23.89% வாக்குப்பதிவு; அதிமுக வேட்பாளர் வெ.நாராயணன் வாக்களித்தார்

வாக்களித்துவிட்டு வெளியேவந்த அதிமுக வேட்பாளர் ரெட்டியார்ப்பட்டி வெ.நாராயணன்

நாங்குநேரி

நாங்குநேரி இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 23.89% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், நாங்குநேரியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு வழக்கத்தைவிட சற்று மந்தமாகவே நடைபெற்றுவருகிறது. நேற்றிரவு பரவலாக தொகுதியில் மழை பெய்தநிலையில் தற்போது பெரிய அளவில் மழை இல்லாவிட்டாலும்கூட வாக்குப்பதிவில் சுணக்கம் தெரிகிறது.

இதற்கிடையில், நாங்குநேரியின் பாளை ஒன்றியம், களக்காடு ஒன்றியம், நாங்குநேரி ஒன்றியம் ஆகிய 3 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 113 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பட்டியல் இனத்தைச் சேர்ந்த 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வலியுறுத்தி தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். இதன் காரணமாகவும் வாக்குப்பதிவு சற்று மந்தமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள மக்களிடம் இதுவரை எந்த அரசியல் கட்சியினரும், அதிகாரிகளும் பேச்சு நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், ரெட்டியார் பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மேற்கு கட்டிடத்தில் காலை 9.30 மணிக்கு வாக்களித்தார். உடன் வந்த அவரது குடும்பத்தினரும் தத்தம் வாக்கை பதிவு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன், "இந்த மண்ணின் மைந்தனான நான் என் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருகிறேன். ஆகவே மக்களின் ஆதரவோடு நிச்சயம் வெற்றி பெறுவேன். என்னை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இந்த தொகுதியில் தனது வாக்கினைகூட பதிவு செய்ய முடியாமல் இருக்கிறார். வாக்கைகூட பதிவு செய்ய முடியாதவரால் மக்களுக்கு எப்படி நலத்திட்டங்களை செய்ய இயலும்" என்று வினவினார்.

காலை 11 மணி நிலவரப்படி, 23.89% வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x