Published : 26 Jul 2015 10:12 AM
Last Updated : 26 Jul 2015 10:12 AM

மதுவிலக்கு அமல்படுத்தினாலும் கள் இறக்க தடை கூடாது: விவசாயிகள் சங்க கூட்டமைப்பு கோரிக்கை

தமிழகத்தில் மதுவிலக்கு அமல் படுத்தினாலும், கள் இறக்க அரசு தடை விதிக்கக் கூடாது என்று தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் செ.நல்லசாமி வலியுறுத்தியுள்ளார்.

உதகையில் செய்தியாளர் களிடம் நேற்று அவர் கூறியதாவது:

தமிழகத்தில் மதுவிலக்கு அமல் படுத்தப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதியின் அறிவிப்பும், மது விலக்கு மற்றும் மதுக் கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறியிருப்பதும் வரவேற்கத்தக்கது. இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அரசியல் ஆதாயம் தேடுபவர்கள்.

தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டாலும் கள் இறக்க தடை விதிக்கக் கூடாது. கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.

ஈ.ஆர்.ஈஸ்வரன் கோரிக்கை

கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். மதுவிலக்கினை அமல்படுத்துவது தொடர்பாக ஆளுங்கட்சியும் ஆலோசித்து வருவதாக கேள்விப் பட்டோம். இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று முதல்வரை வலியுறுத்துகிறோம். கள் என்பது உடலுக்கு ஆரோக்கியமான பானமாகும். எனவே கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த கள் இறக்க அனுமதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x