Published : 19 Oct 2019 07:21 PM
Last Updated : 19 Oct 2019 07:21 PM

விஜயகாந்த் பிரச்சாரத்தில் சென்ற மாணவர் அணி நிர்வாகி கார் கவிழ்ந்து உயிரிழப்பு

காஞ்சிபுரம்

மதுராந்தகம், தொழுப்பேடு அருகே தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தேர்தல் பிரச்சாரம் பயணத்தின் போது உடன் சென்ற தேமுதிக மாணவரணி நிர்வாகி கார் கவிழ்ந்ததில் பலியானார், உடன் சென்ற தந்தை படுகாயமடைந்தார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்ய தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று விக்கிரவாண்டி புறப்பட்டுச் சென்றார். அவர் சென்றபோது வழி நெடுக தேமுதிக தொண்டர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளவாத்தியங்கள் முழங்க கோஷமிட்டப்படி வரவேற்பு அளித்தனர்.

காஞ்சிபுரம் தேமுதிக தெற்கு மாவட்டம் சார்பில் அச்சரப்பாக்கத்தில் விஜயகாந்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோஜா மலர் தூவி ஆளுயர் மாலை, பேண்டு வாத்தியம் முழங்க தொண்டர்கள் வரவேற்றனர். அப்போது மழை பெய்தவண்ணம் இருந்தது. ஆனாலும் கொட்டும் மழையில் வரவேற்றனர். அங்கிருந்து கட்சி நிர்வாகிகள் விஜயகாந்துடன் விக்கிரவாண்டி நோக்கி காரில் உடன் சென்றனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் ஜெயசூர்யா தனது தந்தை தமிழ்குமரனுடன் கலந்துக் கொண்டார். அவர்கள் இருவரும் ஒரு காரில் விஜயகாந்தின் காரை பின் தொடர்ந்து விக்கிரவாண்டி நோக்கிச் சென்றனர். கார் தொழுப்பேடு என்ற இடத்தில் செல்லும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே ஜெயசூர்யா உயிரிழந்தார். அவருடன் பயணித்த அவரது தந்தை தமிழ்குமரன் பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்துவந்த அச்சிறுப்பாக்கம் போலீஸார் ஜெயசூர்யாவின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அரசியல் கட்சித்தலைவர்களில் விஜயகாந்த் ஒருவர் மட்டுமே, பொதுக்கூட்டம் முடியும்போது தனது பேச்சை முடிக்கும்முன் தொண்டர்களை ‘பத்திரமாக பார்த்துச் செல்லுங்கள்’ என தவறாமல் சொல்வது வழக்கம்.

இன்று விஜயகாந்துடன் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் காரில் சென்ற மாணவரணி நிர்வாகி விபத்தில் சிக்கி உயிரிழந்தது தேமுதிகவினரிடையே சோகத்தை உருவக்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x