Published : 19 Oct 2019 06:23 PM
Last Updated : 19 Oct 2019 06:23 PM
திருநெல்வேலி
நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் (21-ம் தேதி) நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்களின் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது.
அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இன்று கிராமம் கிராமமாக சென்று இறுக்திகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் களத்தில் அதிமுக வேட்பாளர் வி. நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் உள்ளிட்ட மொத்தம் 23 வேட்பாளர்கள் உள்ளனர்.
அவர்களில் அதிமுக, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தொகுதி முழுக்க சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தனர். அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு தமிழக முதல்வர் கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், கூட்டணி கட்சி தலைவர்களான ஜி.கே. வாசன், பிரேமலதா விஜயகாந்த், நடிகர்கள் சரத்குமார், கார்த்திக் உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தனர். 15 அதிமுக அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்த தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.
இதுபோல் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து அக் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.பிக்கள் திருநாவுக்கரசர், ஹெச். வசந்தகுமார், ஞானதிரவியம், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர். திமுக துணை பொதுசெயலாளர் ஐ. பெரியசாமி தலைமையில் அக் கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களும், காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களும் இத் தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றினர்.
6 மணியுடன் ஓய்ந்தது..
கடந்த 2 வாரங்களாக சூடுபிடித்திருந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் சீவலப்பேரி, கேடிசி நகர், ரெட்டியார்பட்டி, இட்டமொழி, பரப்பாடி, களக்காடு பகுதிகளில் நேற்று இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மாலையில் நாங்குநேரியில் தனது பிரச்சாரத்தை அவர் நிறைவு செய்தார். இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளருடன் தமிழக அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜு, வி.எம். ராஜலெட்சுமி, ராஜேந்திர பாலாஜி, டாக்டர் விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், காமராஜ், சரோஜா, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடம் பங்கேற்றனர்.
நேற்றிரவு கேடிசி நகரில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் கே. பழனிசாமி அதிமுகவுக்கு ஆதரவு கேட்டு பேசினார்.
காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் சீவலப்பேரியிலிருந்து கேடிசி நகர், ரெட்டியார்பட்டி, இட்டேரி, மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, இட்டமொழி, பரப்பாடி, நாங்குநேரி, ஏர்வாடி, திருக்குறுங்குடி பகுதிகளில் இன்று இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மாலையில் களக்காடு பஜாரில் தனது பிரச்சாரத்தை அவர் நிறைவு செய்தார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, திமுக துணை பொதுசெயலாளர் ஐ. பெரியசாமி, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி., காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் எஸ்கேஎம் சிவகுமார், சங்கரபாண்டியன், பழனிநாடார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.
காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் வசந்தகுமார் எம்.பி. திடியூர், தமிழாக்குறிச்சி பகுதிகளில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார். மருதகுளம் பகுதியில் திருநாவுக்கரசர் எம்.பி. பங்கேற்ற காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பண்டாரபுரம், கோதைச்சேரி, சிவந்திப்பட்டி பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT