Published : 19 Oct 2019 05:46 PM
Last Updated : 19 Oct 2019 05:46 PM
திருநெல்வேலி
நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. அக்.24-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கட்டப் பிரச்சாரம் முடிவுற்ற நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஷில்பா பிரபாகர் சதீஷ் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
151 பதற்றமான வாக்குச்சாவடிகள்..
"நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் 168 இடங்களில் 299 வாக்குச்சாவடிகள் உள்ளன. இறுதி வாக்காளர் பட்டியலில் 1,27,389 ஆண்கள், 1,29,748 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர், சர்வீஸ் வாக்காளர்கள் 278 பேர் என மொத்தம் 2,57,418 வாக்காளர்கள் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்ததை விட 749 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
தேர்தல் பணியில் 1460 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். 20-ம் தேதி இவர்களுக்கு மூன்றாம்கட்ட பயிற்சி நடைபெறுகிறது. 71 இடங்களில் உள்ள 151 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. வழக்கமாக பதற்றமான வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். இந்த முறை அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளன.
நுண் பார்வையாளர்கள் 35 பேர் நியமிக்கப்பட உள்ளனர். நாங்குநேரி தொகுதிக்கு வெளியில் உள்ள பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவதால் தபால் வாக்குகள் யாருக்கும் இல்லை. சர்வீஸ் வாக்காளர்கள் 278 பேருக்கு தபால் வாக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. அவர்களில் 18 பேர் வாக்குப்பதிவு செய்து, தபாலில் அனுப்பியுள்ளனர். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பு வரை பெறப்படும் தபால் வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்படுத்தப்பட்டு, பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ளன. 688 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 359 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 404 விவிபாட் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதி..
நாங்குநேரி தொகுதியில் 2471 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வசதிக்காக 170 வாக்குப்பதிவு மையங்களிலும் வீல் சேர்கள் தயார் நிலையில் வைக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ தன்னார்வலர்களும் இருப்பார்கள். 29 மண்டலங்களுக்கு 30 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் ரிசர்வ் பணியில் இருப்பார். பார்வையற்ற வாக்காளர்கள் 114 பேர் உள்ளனர். அவர்களுக்கு பிரத்யேகமான வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு, பிரெய்லி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமீறல்கள் மீது நடவடிக்கை..
தேர்தல் விதிமீறல் தொடர்பாக 136 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில், 87 புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 548 புகார்கள் வந்தன. அந்த புகார்கள் அனைத்தும் முடித்துவைக்கப்பட்டுள்ளன.
பணம் பறிமுதல் தொடர்பாக 15 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், 22 லட்சத்து 95 ஆயிரத்து 200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 2 லட்சத்து, 99 ஆயிரத்து 500 ரூபாய் பணத்துக்கு உரிய கணக்கு காட்டப்பட்டதால் அந்த தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
பணப்பட்டுவாடு தொடர்பாக வழக்கு..
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாக்குவதும் சட்டப்படி தவறு. பணம் கொடுத்தது, வாங்கியது தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது சில வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு செய்யப்பட்டதை அழிக்காமல் தொடர்ந்து இயந்திரங்களில் வாக்களிக்க அனுமதித்திருந்தனர். அதுபோன் குளறுபடிகள் இருக்கக் கூடாது என்று பயிற்சியின்போது தேர்தல் பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT