Published : 26 Jul 2015 02:29 PM
Last Updated : 26 Jul 2015 02:29 PM

கரும்பு உற்பத்தியை குறைத்ததே அதிமுக அரசின் சாதனை: விஜயகாந்த்

கரும்பு விவசாயிகளையும், சர்க்கரை ஆலைகளையும் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பது உள்ளிட்ட பிரச்சனைகளால் கடந்த மூன்று ஆண்டுகளில் 250 லட்சம் டன்னாக இருந்த கரும்பு உற்பத்தியை 150 லட்சம் டன்னாக குறைத்ததுதான் அதிமுக ஆட்சியின் சாதனை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் கரும்பு விவசாயிகள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டும், மாற்று தொழிலுக்கு செல்லமுடியாமல் கஷ்டமோ, நஷ்டமோ நம்மோடு இருக்கட்டும் என்று எண்ணி கரும்பு விவசாயம் செய்கின்றனர். "பட்டகாலிலே படும், கெட்டகுடியே கெடும்" என்பதைப்போல மாநில அரசினுடைய நிர்வாகத்திறமையின்மையால் தனியார் சர்க்கரை ஆலைகள் சுமார் 1078 கோடி ரூபாய் நிலுவைத்தொகையை கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளன.

இதை பெற்றுத்தருவதற்கு அதிமுக அரசு ஏன் முன்வரவில்லை? கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசின் ஆதாரவிலை அதிகரிக்க அதிகரிக்க, மாநில அரசினுடைய ஆதார விலையை அதிமுக அரசு ரூபாய் 650, 550, 450 என குறைத்துக்கொண்டே வந்து தற்போது 350 ரூபாய் என மிகக்குறைந்த விலையை மட்டுமே அதிமுக அரசு அறிவித்துள்ளது.

இந்த குறைந்த விலையை கரும்பு விவசாயிகளுக்கு தரமறுத்து தனியார் சர்க்கரை ஆலைகள் தற்போது வழக்கு தொடுத்துள்ளன. திடீரென சர்க்கரை ஆலைகள் வழக்கு தொடுப்பதற்கு "பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும்" அதிமுக அரசே காரணமென்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

1998ஆம் ஆண்டு இதுபோன்று தொடரப்பட்ட வழக்கின் காரணமாக 2005ஆம் ஆண்டு வரை மாநில அரசினுடைய ஆதாரவிலையை சர்க்கரை ஆலைகள் வழங்காமலேயே ஏமாற்றிவிட்டதாகவும், அதேபோல் இந்த வழக்கை காரணம்காட்டி இன்னும் பத்தாண்டுகளுக்கு மாநில அரசின் ஆதாரவிலையை வழங்காமல் தனியார் சர்க்கரை ஆலைகள் ஏமாற்றிவிடுமோ? என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

மேலும் 2005ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்கள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில், மாநில அரசு கரும்பு மற்றும் நெல்லுக்கு ஆதார விலையை அறிவிக்க, மாநிலங்கள் தனி சட்டங்களை இயற்றிக்கொள்ளலாம் என கூறியும், சர்க்கரை ஆலைகளுக்கு ஆதரவாக மாநில அரசு அந்த சட்டத்தை இதுவரை நிறைவேற்றவில்லையென்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

சர்க்கரை ஆலைகளில் உற்பத்தியாகும் சர்க்கரைக்கு அதிமுக ஆட்சியில் 5 சதவிகிதம் வாட் (VAT) வரிவிதிக்கப்பட்டதால் வெளிச்சந்தையில் சர்க்கரையை விற்கமுடியவில்லை, அதேசமயத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு வரும் சர்க்கரைக்கு வரி விதிக்கப்படுவதில்லை என்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் குற்றம் சாட்டுகின்றன.

மேலும் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகளில் சர்க்கரை இருப்பு இல்லை. ஆனால் தனியார் சர்க்கரை ஆலைகளில் சுமார் 10 லட்சம் டன் சர்க்கரை இருப்பு உள்ளது. தமிழக அரசு, பொது விநியோகத் திட்டத்திற்கு கூட்டுறவு ஆலைகளில் கொள்முதல் செய்த விலைக்கே, சர்க்கரையை விற்பனை செய்ய தயார் என தனியார் சர்க்கரை ஆலைகள் அறிவித்தும், கொள்முதல் செய்யாமல் வெளிசந்தைகளில் சர்க்கரையை வாங்குவது ஏன்? எத்தனால் தயாரிக்க 9 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டும், டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுவை தயாரிக்க தேவையான எரிசாராயத்தை உற்பத்தி செய்ய ஆட்சியாளர்களால் நிர்பந்தம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தனியார் சர்க்கரை ஆலைகளில் கரும்பு சக்கையைக்கொண்டு சுமார் 800 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தனியாரிடம் ஒரு யூனிட் மின்சாரம் சுமார் 14.50 ரூபாய்க்கும், இலவசமாக கிடைக்கும் சூரிய மின் சக்தியை அதானி நிறுவனத்திடம் சுமார் 7.01 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யும் அதிமுக அரசு தனியார் சர்க்கரை ஆலைகளிடமிருந்து மட்டும் சுமார் 3.15 ரூபாய் என குறைந்த விலையில் மின்சாரத்தை கொள்முதல் செய்கிறது. கரும்பு விவசாயிகளையும், சர்க்கரை ஆலைகளையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறது என்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தனியார் சர்க்கரை ஆலைகள் அதிமுக அரசு மீது கூறுகிறது.

இதுபோன்ற பிரச்சனைகளால் கடந்த மூன்று ஆண்டுகளில் 250 லட்சம் டன்னாக இருந்த கரும்பு உற்பத்தியை 150 லட்சம் டன்னாக குறைத்ததுதான் அதிமுக ஆட்சியின் சாதனை. கரும்பு உற்பத்தி செலவும், ஆலைகளின் நிர்வாக செலவும் அதிகரித்துள்ள நிலையில், தேவைகேற்ப சர்க்கரை உற்பத்தியும், மீதியுள்ள கரும்பில் எத்தனால் உற்பத்தி செய்யும் வகையில், தொலைநோக்கு பார்வையில் திட்டங்களை வகுத்து தமிழக அரசு செயல்படவேண்டும்.

மேலும் கரும்பு டன் ஒன்றுக்கு 3500 ரூபாய் வழங்கவேண்டும் என்கின்ற விவசாயிகளின் கோரிக்கையை தமிழக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றவேண்டும். அதன்மூலம் விவசாயிகளின் சொத்துகளும், நகைகளும் ஏலத்திற்கு போகாமலும், அவர்களுக்கு கடன் தொல்லை ஏற்படாமலும், அதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏதும் இல்லாமலும், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதையும் தடுக்க முடியும்.

கரும்பு விவசாயமும், கிராமங்களும் நேரடியாக சார்ந்துள்ள ஒன்றை ஒன்று பிரிக்கமுடியாத தொழிற்துறை சர்க்கரைஆலை மட்டுமேயாகும். எனவே கிராமத்தையும், கரும்பு விவசாயத்தையும் அழிவிலிருந்து காக்கவேண்டிய முழுப் பொறுப்பும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு உள்ளதென்பதை மறந்துவிடக்கூடாது" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x