Published : 19 Oct 2019 02:18 PM
Last Updated : 19 Oct 2019 02:18 PM

சீமான் மீது நடவடிக்கை; தேர்தல் ஆணைய விதியால் தாமதமா?- ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கருணாநிதி பேட்டி

சென்னை

இறையாண்மைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட பிறகும் சீமான் மீது நடவடிக்கை தாமதமாவதற்குக் காரணம் என்ன? தேர்தல் ஆணைய நடைமுறை என்ன? போன்ற கேள்விகளுக்கு ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கருணாநிதி விவரமாகப் பதில் அளித்துள்ளார்.

கடந்த 13-ம் தேதி அன்று விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சீமான், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்துப் பேசினார். "ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படை என்கிற அநியாயப் படையை அனுப்பி என் இன மக்களைக் கொன்று குவித்தார். என் இனத்தின் எதிரியான ராஜீவை தமிழர் தாய் மண்ணில் கொன்று குவித்தது வரலாறு. ஒரு காலம் வரும். வரலாறு திருப்பி எழுதப்படும்'' என்று பேசினார்.

சீமானின் இந்தப் பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தான் பேசியதில் இருந்து பின் வாங்கப்போவதில்லை என்று சீமான் பேட்டி கொடுத்தார்.

விக்கிரவாண்டி போலீஸார் பிரிவு 153 (கலகம் விளைவிக்கும் வகையில் பேசுவது) மற்றும் 504 (இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் வகையில் பேசுவது) என்ற பிரிவின் கீழ் சீமான் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

ஐபிசி பிரிவு 121 (ராணுவ மாண்பைக் குறைக்கும் வகையில், ராணுவத்துக்கு எதிராகப் போர் தொடுக்கும் வகையில் பேசுவது) 124(ஏ) (அரசாங்கத்தின் மீது வெறுப்பு அல்லது அவமதிப்பை ஏற்படுத்துதல் அல்லது ஏற்படுத்த முயலுதல் அல்லது அவநம்பிக்கையைத் தூண்டுதல் அல்லது தூண்ட முயலுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும் என டிஜிபி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதன் பின்னரும் சீமான் மீது நடவடிக்கை இல்லை, அவரை ஏன் கைது செய்யவில்லை, உரிய பிரிவின் கீழ் வழக்கு தொடரவில்லை என சிலரும், தேர்தல் ஆணைய நடைமுறை காரணமாகவே தாமதம் என சிலரும், தேர்தல் 2 தொகுதிகளுக்கு மட்டும்தானே நடக்கிறது. இது எப்படி ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பொருந்தும் என சிலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சீமான் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் இப்படித்தான் பேச வேண்டும், பேசக்கூடாது என்று விதி உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து அறிய ஓய்வுபெற்ற காவல்துறை எஸ்.பி. கருணாநிதியிடம் 'இந்து தமிழ்' இணையதளம் சார்பில் கேள்விகளை எழுப்பினோம்.

சீமான் விவகாரத்தில் தேர்தல் நடத்தை விதி இருப்பதால் அவர் மீது உடனடி நடவடிக்கை இல்லை என்கின்றனரே. அது சரியா?

என்ன நடந்தது என்பது குறித்து தேர்தல் ஆணையம்தான் விளக்கமாக அறிக்கை அனுப்பும்.

சட்டப் பிரிவுகள், போலீஸ் நடவடிக்கை எல்லாம் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில்தான் வருமா?

ஏற்கெனவே 153, 504 போட்டுள்ளார்கள். எப்.ஐ.ஆர் போட்டுவிட்டார்கள். கைது நடவடிக்கை எடுத்தால் அரசு மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்பார்கள். ஏனென்றால் தேர்தல் நடப்பதால் தேர்தல் பிரச்சாரத்தைத் தடுக்கிறார்கள் என்று புகார் வரும். ஏனென்றால் பிரச்சாரத்தில் ஒரு பகுதி அல்லவா? நடவடிக்கை எடுத்தால் பிரச்சினை வரும். அதனால் எப்.ஐ.ஆர். போட்டு வைத்துவிடுவார்கள். தேர்தல் முடிந்த பின்னர் கைது நடவடிக்கை இருந்தாலும் இருக்கும்.

இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. இது ஒட்டுமொத்த தமிழக காவல்துறை நடவடிக்கையை கட்டுப்படுத்துமா?

இது தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது அல்லவா. விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். அது விழுப்புரம் அதிகார எல்லையில் வருகிறது. அது தேர்தல் ஆணையக் கட்டுப்பாட்டில் இருப்பதால் எதையும் தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும்.

தேர்தல் முடியும் வரையில் அந்தப் பகுதியில் உள்ள அதிகாரிகள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வருகிறார்கள். அதனால் அவர்கள் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்குக் கீழ் வருவார்கள்.

காங்கிரஸார் சிலர் டிஜிபியிடம் அளித்த புகார் மனுவில் பிரிவு 121, 124(ஏ)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கேட்கிறார்கள். இதில் டிஜிபி நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியுமா?

இங்கு நடப்பது எல்லாமே விழுப்புரம் மாவட்ட அதிகார வரம்புக்குள் நடக்கிறது. அது தேர்தல் ஆணையக் கட்டுப்பாட்டில் வருகிறது. ஆகவே, எந்த நடவடிக்கை என்றாலும் அங்குள்ள விக்கிரவாண்டி போலீஸார்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் நடவடிக்கை என்று டிஜிபி அறிவுறுத்தலாம். எப்.ஐ.ஆர். போடச் சொல்லலாம், ஆனால் நடவடிக்கை எடுப்பது என்பது தேர்தல் ஆணையம் பரிந்துரை அனுப்பி அவர்கள் அனுமதி அளிக்க வேண்டும்.

இதை இப்படி எடுத்துக்கொள்ளலாமா? எப்.ஐ.ஆர் போடலாம். ஆனால் கைது போன்ற நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவேண்டும் என்பது சரியா?

ஆமாம், நடவடிக்கை என்பது தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். எப்.ஐ.ஆர் போடுவது என்பது சட்ட நடைமுறை, ஆனால், நடவடிக்கை எடுப்பது என்பது தேர்தல் நடத்தை விதியின் கீழ் வருவதாலும், தேர்தல் ஆணையக் கட்டுப்பாட்டில் அந்தப் பகுதி வருவதாலும் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும்.

ஏதாவது சட்டம் ஒழுங்கு பிரச்சினை வர வாய்ப்புள்ளது அல்லவா? அதனால் தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.
தற்போது பதிவு செய்துள்ள 153 மற்றும் 504 பிரிவுகள் சரியா?

தற்போது போட்டுள்ள பிரிவு சரியானதுதான். 153 பிரிவு என்பது தரக்குறைவாகப் பேசி, கலவரத்தைத் தூண்டும் வகையில் ஒரு பிரிவினரைத் தூண்டும் வகையில் பேசி அவர்கள் கொதிப்படைந்து கலவரம் வர வாய்ப்புள்ளது அல்லவா? அதனால் அது சரியான பிரிவுதான்.

ஆனால் காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் ராணுவத்துக்கு (IPKF) எதிராகப் பேசியதால் 121 பிரிவு போடவேண்டும் என்று கேட்கிறார். அது சரியாக இருக்குமா?

ஆமாம், ராணுவத்துக்கு எதிராக, இறையாண்மைக்கு எதிராகப் பேசியதால் அந்தப் பிரிவும் வரலாம். தற்போது கைது நடவடிக்கைக்காக 153, 504 பிரிவின் கீழ் போட்டுள்ளார்கள். ஐபிசி செக்‌ஷன் எப்.ஐ.ஆரில் போடுவதே இறுதி அல்ல. கூடுதலாக என்னென்ன பிரிவுகள் பொருந்தும் என்பதை பின்னர் சட்ட ஆலோசகர் ஆலோசனைப்படி சேர்ப்பார்கள்.

இந்திய ராணுவத்துக்கு எதிராக, இந்திய இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் பேசியுள்ளார், முன்னாள் பிரதமர் மரணம் குறித்துப் பேசியுள்ளார் என்று குற்றச் சம்பவங்களை ஆலோசித்து பொருத்தமான பிரிவுகளைச் சேர்ப்பார்கள். சார்ஜ்ஷீட் போடும்போது அதெல்லாம் சேரும். தற்போது போட்டுள்ள பிரிவுகளே கைது செய்யும் வகையிலான பிரிவுகள்தான்.

ஏனென்றால் அவை ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகள்தான். ஆனாலும் முடிவில் குற்றத்தன்மையை வைத்து 121 அல்லது 124(ஏ) போன்ற பிரிவுகளும் பின்னர் விசாரணை நேரத்தில் சேர்க்கப்படலாம்.

இவ்வாறு ஓய்வுபெற்ற காவல்துறை எஸ்.பி. கருணாநிதி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x