Published : 17 Oct 2019 07:27 PM
Last Updated : 17 Oct 2019 07:27 PM
ராமநாதபுரம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றது நாங்கள்தான் என விடுதலைப் புலிகளே அறிவிக்கவில்லை, இருந்தபோதும் சம்பந்தமே இல்லாதவர்கள் கூறுவது ஆச்சரியமாக உள்ளது என கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் இன்று(அக்.17) திருவாடனை சட்டப்பேரவை உறுப்பினர் நடிகர் கருணாஸ்மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று நடிகர் சீமான் கூறியுள்ளார். விடுதலைப் புலிகளே ராஜீவ் காந்தியை கொன்றதாக அறிவிக்கவில்லை. அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனே அது ஒரு துரதிஷ்டவசமாக நடந்தது என்றுதான் கூறியிருக்கிறார்.
ஆனால், அதற்கு சம்பந்தமே இல்லாதவர்கள் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
போர்க்களத்தில் நிற்காதவர்கள், அங்கு என்ன நடந்தது என்று கூடத் தெரியாதவர்கள், பிரபாகரனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஒரே ஒரு ஆதாரத்தை வைத்துக்கொண்டு, தமிழகத்தில் சில தலைவர்கள் போர்க்களத்தில் நின்று போரிட்டவர்கள் போல கூறி வருகின்றனர்.
ஈழத்தமிழர்களின் உயிர் தியாகத்தை தன்னுடைய சுயநலத்துக்கு பயன்படுத்துவது என்பது என்னைப் பொருத்த வரைக்கும் கீழ்த்தரமானது .
தேச விடுதலைக்காக போராடியவரும், வாய்ப்பூட்டுச் சட்டத்தை எதிர்த்து, இந்தியாவில் திலகருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் போராடிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவை போற்றும் வகையில், அவரது பிறந்த நாளை அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும்.
வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எங்கள் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் போட்டியிடுவோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது எங்கள் கட்சிக்கு எப்படி முக்கியத்துவம் கொடுத்தார்களோ, அதுபோல முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நான் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்று கருணாஸ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT