Published : 17 Oct 2019 07:20 PM
Last Updated : 17 Oct 2019 07:20 PM
ராமநாதபுரம்
பசும்பொன் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பேனர் வைக்கவும், வாடகை வாகனங்களில் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். விழா பாதுகாப்பில் 8,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் வரும் வருகின்ற அக்டோபர் 30 அன்று முத்துராமலிங்கத் தேவர் 112-வது ஜெயந்தி விழா மற்றும் 57-வது குருபூஜை விழா நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ், தென் மண்டல ஐஜி கே.பி.சண்முக ராஜேஸ்வரன், ராமநாதபுரம் சரக டிஐஜி ரூபேஸ் குமார் மீனா, காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, நடிகர் கருணாஸ் எம்எல்ஏ ஆகியோர் பசும்பொன் தேவர் நினைவிடம் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டிய இடங்களை ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது திருவாடானை தொகுதி எம்எல்ஏ நடிகர் கருணாஸ், தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன், நிர்வாகிகள் ராமச்சந்திரன், தங்கவேலு மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஆய்வினைத் தொடர்ந்து ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அரசு சார்பில் தேவரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படவுள்ளது.
இவ்விழாவில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக முக்கிய பிரமுகர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் அதிகளவில் வருவர்.
அஞ்சலி செலுத்துவதற்கான வழியினை முறையே போதிய அளவு பாதுகாப்பு தடுப்புகள் அமைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏறத்தாழ 8000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அவசரகால சூழ்நிலையினை எதிர்கொள்ள ஏதுவாக 11 மருத்துவக்குழுக்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்படும். போதிய அளவு குடிநீர் வசதி ஏற்படுத்திடவும், தற்காலிக கழிப்பறைகள் மற்றும் குப்பைத்தொட்டிகள் அமைக்கப்படும்.
பிற மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் அந்தந்த மாவட்டங்களில் முறையான அனுமதி பெற வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் வரையறுக்கப்பட்டுள்ள வழித்தடங்களிலேயே வந்து செல்ல வேண்டும்.
தலைவர்களுடன் செல்லும்பொழுது 3 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். மேலும், தலைவர்களது வாகனம் மற்றும் அதனுடன் செல்லும் 2 வாகனங்கள் பற்றிய விபரத்தினை நிகழ்ச்சி நடைபெறும் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே மாவட்ட காவல் அலுவலகத்தில் தெரிவித்து வாகன அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.
தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்ல வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் அக்.29,ல30-ம் தேதிகளில் கமுதிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். பசும்பொன் செல்ல கூடுதல் பேருந்து தேவைப்படும் கிராமத்தினர் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் முன்னதாகவே மனு அளித்திட வேண்டும்.
அரசுப் பேருந்துகளில் ஜோதி, மதுபாட்டில் மற்றும் ஆயுதங்கள் எடுத்துச்செல்வது, கொடி மற்றும் பேனர் கட்டிச்செல்வது, ஒலிபெருக்கி ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பேனர்கள் வைக்கவும் தடைவிதிக்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT