Published : 17 Oct 2019 03:31 PM
Last Updated : 17 Oct 2019 03:31 PM
வேலூர்
வேலூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து டெங்கு பரவக் காரணமாக இருந்த தனியார் பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மாவட்டந்தோறும் சுகாதாரத்துறையினர் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இருப்பினும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை டெங்கு காய்ச்சலால் 792 பேர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 348 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 792 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மட்டுமின்றி சுகாதாரத்துறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுமி பலியாகியுள்ளார்.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானத்தைச் சேர்ந்தவர் சரண்மோகன்ராஜ். இவரது மகள் நட்சத்திரா (4). இவர் பள்ளிகொண்டா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். கடந்த 11-ம் தேதி நட்சத்திராவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அருகேயுள்ள மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், காய்ச்சல் குறையவில்லை என்பதால், நட்சத்திரா வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிறுமிக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தனர். அங்கும் காய்ச்சல் குறையாததால், சிறுமியின் ரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் நட்சத்திராவுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமிக்கு சிகிச்சை முறைகள் மாற்றப்பட்டு மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்புக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும், நட்சத்திரா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழந்த சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மாவட்ட சுகாதாரத்துறையினர் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே, டெங்கு காய்ச்சலால் பள்ளிகொண்டாவைச் சேர்ந்த நட்சத்திரா என்ற மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாணவியின் வீடு மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் டெங்கு கொசு உள்ளதா? என பள்ளிகொண்டா பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் கொசுப்புழு ஏதும் கண்டறியப்படவில்லை.
இதையடுத்து, வெட்டுவானம் அருகே மாணவி படித்து வந்த தனியார் மெட்ரிக் பள்ளியில் சுகாதாரத்துறையினர் நேற்று (அக்.16) ஆய்வு நடத்தினர். அங்கு அதிக அளவில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுப்புழுக்கள் இருப்பது தெரியவந்தது. மேலும், டெங்கு பரவுவதைத் தடுக்க அப்பள்ளி நிர்வாகம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்தப் பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். மேலும், தனியார் பள்ளியில் இன்று கொசுப்புழு ஒழிப்புப் பணியும், மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்த சுகாதாரத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT