Published : 17 Oct 2019 02:51 PM
Last Updated : 17 Oct 2019 02:51 PM
திருத்தணி
திருத்தணி முருகன் கோயில் அருகே டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசு உற்பத்திக்கு வழிவகுத்த டிபன் சென்டருக்கு 5 ஆயிரம் ரூபாய், பொரிக்கடை மற்றும் வீட்டுக்கு தலா 500 ரூபாய் என அபராதம் விதித்து, வருவாய்த் துறை மற்றும் நகராட்சித் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் திருத்தணி பகுதியைச் சேர்ந்த குழந்தை, சிறுமிகள், இளம்பெண் என 4 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
ஆகவே, திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில், பொது சுகாதாரத் துறையினர் தீவிர தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (அக்.17) திருத்தணி முருகன் கோயிலுக்கு அருகே, படிகள் மூலம் கோயிலுக்குச் செல்லும் பாதையில் உள்ள பகுதியில் திருத்தணி கோட்டாட்சியர் கார்த்திகேயன் மற்றும் திருத்தணி நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி தலைமையில், வருவாய்த் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசு புழு உற்பத்திக்கு ஏதுவான சூழல் இருக்கிறதா? என்பது குறித்து அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வில், அப்பகுதியில் டிபன் சென்டர், பொரிக்கடை மற்றும் வீடு ஆகியவற்றில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுப்புழு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில், தண்ணீர் பேரல்கள், காலி பிளாஸ்டிக் டப்பாக்கள், தேங்காய் மூடிகள் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.
ஆகவே, டிபன் சென்டருக்கு 5 ஆயிரம் ரூபாய், பொரிக்கடை மற்றும் வீட்டுக்கு தலா 500 ரூபாய் என, அபராதம் விதித்து, வருவாய்த் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT