Published : 16 Jul 2015 06:14 PM
Last Updated : 16 Jul 2015 06:14 PM
தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானங்கள் இரவு நேரத்தில் தரையிறங்கும் வசதி ஏற்படுத்துவதில் ஏற்பட்டு வரும் காலதாமதம் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.
தூத்துக்குடியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள வாகைகுளம் பகுதியில் விமான நிலையம் அமைந்துள்ளது. 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விமான நிலையத்தில் 14 ஆண்டுகளாக விமான சேவை முறையாக தொடங்கப்பட வில்லை. ஓரிரு நிறுவனங்கள் அவ்வப் போது விமான சேவையை தொடங்கிய போதி லும அது சில மாதங்கள் மட்டுமே நீடித்தது. இதனால் தூத்துக்குடி விமான நிலையம் பெயரளவுக்கே செயல்பட்டு வந்தது.
2006-ல் தொடக்கம்
கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி தூத்துக்குடி- சென்னை இடையே விமான சேவை முதன் முதலாக தொடங்கப்பட்டது. இந்த விமான சேவைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத் தது. கடந்த 9 ஆண்டுகளாக இந்த விமான சேவை வெற்றிகரமாக நடந்து வருகிறது.
தூத்துக்குடி - சென்னை இடையே தினசரி ஒரு விமானம் இயக்கப்பட்டு வந்த நிலை மாறி, தற்போது தினமும் 2 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சார்பில் இரண்டு சிறிய ரக விமானங்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
இரவு தரையிறங்கும் வசதி
பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மேலும் சில தனியார் நிறுவனங்கள் தூத்துக்குடிக்கு விமான சேவையை தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக தூத்துக்குடியில் இருந்து பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்களை இயக்க தனியார் நிறுவனங்கள் தயாராக உள்ளன. மேலும், தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு விமான சேவையை தொடங்குவது தொடர்பாகவும் ஒரு நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது.
ஆனால், விமானங்கள் இரவில் தரையிறங்கும் வசதி இல்லாதது, கூடுதல் விமான சேவையை தொடங்க பெரும் தடையாக இருந்து வருகிறது.
விமான நிலையம் தொடங்கப்பட்டு 23 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் விமானங்கள் இரவு நேரத்தில் தரையிறங்க முடியாத நிலை இருந்து வருகிறது.
தூத்துக்குடியில் விமானங்கள் இரவில் தரையிறங்கும் வசதியை உடனே ஏற்படுத்த வேண்டும் என தூத்துக்குடி இந்திய தொழில் வர்த்தக சங்கம், அகில இந்திய தொழில் வர்த்தக சங்கம், இந்திய தொழில் கூட்டமைப்பு போன்ற பல்வேறு அமைப்புகள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றன.
`இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஆகியவை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது’ என்கிறார், அகில இந்திய தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் பி.எஸ்.எஸ்.கே.ராஜாசங்கரலிங்கம்.
கூடுதல் விமான சேவைக்கு வாய்ப்பு
`தி இந்து’ நாளிதழிடம் அவர் மேலும் கூறியதாவது:
தூத்துக்குடி துறைமுக நகரமாக இருப்பதால் ஏராளமான புதிய தொழிற்சாலைகள் உருவாகி வருகின்றன. உள்நாட்டு முதலீடுகள் மட்டுமின்றி வெளிநாட்டு முதலீடுகளும் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, தூத்துக்குடிக்கு விமான சேவை அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. தற்போது சென்னைக்கு மட்டுமே 2 சிறிய விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
விமான நிலையத்தில் விமானங்கள் இரவில் தரையிறங்கும் வசதி உருவானால் மட்டுமே கூடுதல் விமானங்களை இயக்கவும், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விமான சேவையை தொடங்கவும் முடியும்.
இந்திய விமான நிலையங்கள் ஆணையமும், மத்திய விமான போக்குவரத்து துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார் அவர்.
வசதிகள் தயார்
இதுதொடர்பாக விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்ட போது, `விமானங்கள் இரவு நேரத்தில் தரையிறங்குவதற்கு தேவையான விளக்குகள், சிக்னல்கள் உள்ளிட்ட வசதிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டு விட்டன.
விமான நிலைய சுற்றுப் பகுதியில் உயரமான கட்டிடங்கள் உள்ளிட்டவை இருந்தால் அதன் உச்சியில் சிவப்பு விளக்கு பொருத்த வேண்டும். அந்த வகையில் தூத்துக்குடி விமான நிலையம் அருகே உயரமானதாக இருப்பது வல்லநாடு மலை மட்டும்தான். அதன் உச்சியில் சிவப்பு விளக்கு பொருத்த வேண்டும்.
சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் சிவப்பு விளக்கு பொருத்த மலை உச்சியில் 10 மீட்டர் கன சதுரத்தில் இடம் ஒதுக்க வனத்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. வல்லநாடு மலை பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருப்பதால் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அனுமதியை பெற வேண்டியுள்ளது. அதில் காலதாமதம் ஏற்படுவதாலேயே விமான நிலையத்தில் இரவு விமான சேவையை தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது’ என்றனர் அதிகாரிகள்.
சர்வதேச தரத்துக்கு உயரும் வாய்ப்பு
தூத்துக்குடி விமான நிலையம் விரைவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதற்காக விமான நிலைய பகுதியில் 586 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் முடித்து, நிலத்தை இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைத்ததும் விமான நிலைய விரிவாக்க பணிகள் தொடங்கும்.
தற்போது, 1,350 மீட்டர் மட்டுமே உள்ள ஓடுதளம் 3000 மீட்டர் நீளத்துக்கு விரிவாக்கம் செய்யப்படும். மேலும் பல்வேறு அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் ஏர்பஸ் போன்ற பெரிய விமானங்களும் தரையிறங்க முடியும். இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் விமானங்களை இயக்க முடியும்’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது சென்னைக்கு மட்டுமே 2 சிறிய விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமானங்கள் இரவில் தரையிறங்கும் வசதி உருவானால் மட்டுமே கூடுதல் விமானங்களை இயக்கவும், புதிய விமான சேவையை தொடங்கவும் முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT