Published : 16 Oct 2019 04:46 PM
Last Updated : 16 Oct 2019 04:46 PM

சீமான் பேச்சு; காங்கிரஸ் கேட்கும் பிரிவுகளில் வழக்கு தொடர வாய்ப்புள்ளதா?- சட்ட நிபுணர் பதில்

சென்னை

ராஜீவ் படுகொலை குறித்தும், இந்திய அமைதிப்படை குறித்தும் சீமான் விமர்சித்துப் பேசிய நிலையில் அவர் மீது குறிப்பிட்ட ஐபிசி பிரிவில் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சி கேட்பது சரியா? என்பது குறித்து சட்ட நிபுணர் பதில் அளித்துள்ளார்.

கடந்த 13-ம் தேதி அன்று விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சீமான், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்துப் பேசினார். "ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படை என்கிற அநியாயப் படையை அனுப்பி என் இன மக்களைக் கொன்று குவித்தார். என் இனத்தின் எதிரியான ராஜீவை தமிழர் தாய் மண்ணில் கொன்று குவித்தது வரலாறு. ஒரு காலம் வரும். வரலாறு திருப்பி எழுதப்படும்'' என்று பேசினார்.

சீமானின் இந்தப் பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தான் பேசியதில் இருந்து பின் வாங்கப்போவதில்லை என்று சீமான் பேட்டி கொடுத்தார்.

விக்கிரவாண்டி போலீஸார் பிரிவு 153 (கலகம் விளைவிக்கும் வகையில் பேசுவது) மற்றும் 504 (இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் வகையில் பேசுவது) என்ற பிரிவின் கீழ் சீமான் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

காங்கிரஸ் சார்பில் டிஜிபி மற்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. ஐபிசி பிரிவு 121 (ராணுவ மாண்பைக் குறைக்கும் வகையில், ராணுவத்துக்கு எதிராகப் போர் தொடுக்கும் வகையில் பேசுவது) 124(ஏ) (அரசாங்கத்தின் மீது வெறுப்பு அல்லது அவமதிப்பை ஏற்படுத்துதல் அல்லது ஏற்படுத்த முயலுதல் அல்லது அவநம்பிக்கையைத் தூண்டுதல் அல்லது தூண்ட முயலுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும் என டிஜிபி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

சீமான் மீது போடப்பட்ட சட்டப் பிரிவு சரியா? அல்லது காங்கிரஸ் கட்சி கேட்கும் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவேண்டுமா? என்பது குறித்து சட்ட நிபுணர், மூத்த வழக்கறிஞர் ரமேஷிடம் 'இந்து தமிழ்' இணையதளம் சார்பில் கேட்டோம்.

இடைத்தேர்தல் நடப்பதால் சீமான் மீது கைது நடவடிக்கை இல்லை. அவர் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யவில்லை என்ற கருத்து நிலவுகிறதே. இது சரியா?

தேர்தல் இரு தொகுதிகளில் மட்டுமே நடக்கிறது. மாநிலம் முழுவதும் தேர்தல் நடந்தால் நிர்வாகமே தேர்தல் ஆணையக் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், இடைத்தேர்தல் நடக்கும் ஒரு தொகுதியில் பிரச்சாரத்தில் அவர் பேசினார். இதில் தேர்தல் நடைமுறை வருமா என்பது கொஞ்சம் சிக்கலான கேள்விதான்.

ஆனால், இந்தப் பிரிவுதான் போடவேண்டும் என தேர்தல் ஆணையம் சொல்ல வாய்ப்பில்லை. அவர்கள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார்கள். அவர் அந்தத் தொகுதியில் பேசினார் என்பதால் ஒருவேளை தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம்.

சீமான் பேசியது தேர்தல் ஆணைய நடத்தை விதிமீறலில் வரும் என்றால் தேர்தல் ஆணைய வழிகாட்டுதலில் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அவர் பேசியது அதையெல்லாம் தாண்டி வெளிநாட்டினர் பங்குபெற்ற ஒரு தேசத்தலைவரின் கொலை சம்பந்தமாக. அதுவும் அரசியல் ரீதியாக நடந்த கொலை. அதுபற்றிப் பேசுவது, நியாயப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியது என்பதால் இது தேர்தல் ஆணைய வரைமுறைக்குள் வருமா? என்பதையெல்லாம் பார்க்க முடியாது. ஏனென்றால் இப்போதும் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கம்தான்.

சீமான் விடுதலைப் புலிகள் இயக்க அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் அல்ல. அவர்கள் ராஜீவ் கொலையை மறுத்துள்ளார்கள். ஆகவே, சீமான் நாங்கள்தான் செய்தோம் என்றெல்லாம் விடுதலைப் புலிகளை இணைத்துப் பேசுவது தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகச் செயல்படுவது, பேசுவது என்பது இந்திய இறையாண்மைக்கு எதிராக விடுக்கப்படும் சவால். இதற்கு தேர்தல் ஆணைய நடத்தை விதிகளைப் பார்க்கக்கூடாது என்று நினைக்கிறேன்.

சீமான் பேச்சு குறித்து 153, 504 பிரிவுகள் சரியானதுதானா? காங்கிரஸ் தரப்பில் 121 மற்றும் 124(எ) பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரவேண்டும் என்று கேட்கிறார்கள். இதில் எது சரி?

504 பிரிவு இதற்குப் பொருந்தாது. அது பொருத்தமானதாக இருக்காது. அது இரு பிரிவினருக்கிடையே நடக்கும் மோதல் சம்பந்தமாக போட வேண்டிய பிரிவு. சீமான் பேசியது, இந்திய அரசாங்கத்துக்கு எதிராகப் போர் தொடுப்பது, இறையாண்மை சம்பந்தப்பட்ட விவகாரம். இது 121-வது பிரிவின்கீழ் வரும். ஏனென்றால் இந்திய அமைதிப்படை குறித்த விமர்சனம் மாண்பைக் குலைக்கும் செயல். ஆகவே 124(எ)-பிரிவும் இதற்குப் பொருந்தும்.

சீமான் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசியுள்ளதும் குற்றம். முன்னாள் பிரதமர் கொலை குறித்துப் பேசுவதும், இந்திய அமைதிப்படையை விமர்சிப்பதும் இந்திய ராணுவத்துக்கு எதிராகப் போர் தொடுப்பது, தூண்டிவிடுவது என்கிற ரீதியில் பார்ப்பார்கள். ஆகவே 124(எ)-ன் கீழ் நடவடிக்கை வரலாம்.

ஒரு நாட்டுக்கு எதிராக, இறையாண்மைக்கு எதிராக, ராணுவத்துக்கு எதிராக அவதூறாகப் பேசுவது, முன்னாள் பிரதமர் கொலையை நியாயப்படுத்துவது, தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசுவது போன்றவை சாதாரணமாகப் பார்க்கப்பட வாய்ப்பில்லை. கண்டிப்பாக நடவடிக்கை வரலாம். காரணம் இந்த நடவடிக்கைகள் மூலம் இதுபோன்று எதை வேண்டுமானாலும் யாரும் இறையாண்மைக்கு எதிராகப் பேசிவிட முடியாது என்கிற சமிக்ஞையை பொதுமக்களுக்கு அரசு கொண்டு செல்லும்''.

இவ்வாறு மூத்த வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x