Last Updated : 16 Oct, 2019 03:07 PM

 

Published : 16 Oct 2019 03:07 PM
Last Updated : 16 Oct 2019 03:07 PM

பூஜை, வழிபாடு பயிற்சிக்காக புதிய மேல்சாந்திகள் நாளை சபரிமலை வருகை

தேனி

சபரிமலை மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்பட்டவர்கள் வழிபாட்டு பயிற்சிக்காக நாளை சபரிமலை வரவுள்ளனர். ஒரு மாத பயிற்சிக்குப்பிறகு வரும் கார்த்திகையில் இவர்கள் பொறுப்பேற்றுக் கொள்வர்.

சபரிமலை ஐயப்பன் கோயில் வழிபாட்டிற்காக தந்திரி எனும் தலைமை குருவும் மேல்சாந்தி எனும் இரண்டு தலைமை பூசாரிகளும் நியமிக்கப்படுவது வழக்கம். இவர்களின் பதவிகாலம் ஒரு ஆண்டு. இதில் தலைமைகுரு ஆவணி முதல் ஆடி மாதம் வரையிலும், மேல்சாந்திகள் கார்த்திகை முதல் ஐப்பசி வரையும் வழிபாட்டுப் பணிகளில் ஈடுபட்டுவருவர்.

படிபூஜை, கணபதிஹோமம், சகஸ்கர பூஜை உள்ளிட்ட முக்கிய பூஜைகளை தந்திரியும், இதர வழிபாடுகளை மேல்சாந்திகளும் செய்வது வழக்கம்.

தந்திரி பதவிகளுக்கு கண்டரரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மாறி மாறி பொறுப்பு வகித்து வருவர்.

மேல்சாந்திக்கு ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடைபெறும். பல்வேறு கட்டத்திற்குப் பிறகு தேர்வு செய்யப்படும் ஒன்பது பேரில் இருவர் உறுதிப்படுத்தப்படுவர்.

இதற்காக பந்தலமன்னர் வம்சாவளியைச் சேர்ந்த குழந்தைகளைப் பேப்பரில் எழுதப்பட்ட பெயரை குடத்தில் இருந்து எடுக்கச் சொல்லி அதில் உள்ளபடி மேல்சாந்திகள் நியமனம் நடைபெறும்.

இந்த மேல்சாந்திகள் சபரிமலை, மாளிகைப்புரத்து அம்மன் ஆகிய கோயிலுக்கு நியமிக்கப்படுவர்.

தற்போது மேல்சாந்திகளாக வாசுதேவன் நம்பூதரி, நாராயணன் நம்பூதரி ஆகியோர் உள்ளனர். ஐப்பசி மாதத்துடன் இவர்களின் பதவிக் காலம் முடிவடைகிறது. எனவே புதிய மேல்சாந்திகளாக சுதிர், பரமேஸ்வரன் ஆகியோர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை புதிய மேல்சாந்திகள் 12 மாதங்கள் மட்டுமே பொறுப்பு வகித்து வந்தனர். இந்த ஆண்டு முதல் ஓராண்டு பயிற்சியும் இதில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

இதன்படி கார்த்திகை மாதம் வரவேண்டிய மேல்சாந்திகள் ஐப்பசி மாதமே வந்து வழிபாடுகளுக்கான பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை(அக்.17) ஐப்பசி மாதத்திற்கான நடை மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்பட்ட மேல்சாந்திகள் இருமுடி கட்டி வருவர். இவர்களை தற்போதுள்ள மேல்சாந்திகள் படி வழியே கைபிடித்து அழைத்துச் செல்வர்.

வரும் கார்த்திகை வரை புதிய மேல்சாந்திகளுக்கு ஒரு மாத வழிபாடுபயிற்சி அளிக்கப்படும். இதில் சந்தன, நெய் அபிஷேகம், லட்சார்ச்சனை, சகஸ்கர பூஜை உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு முறைகள் குறித்து பயிற்றுவிக்கப்படும். பயிற்சி நாட்களில் இவர்கள் கோயில் வழிபாடு செய்ய முடியாது.

கார்த்திகை மாதம் பிறந்ததும் இவர்கள் பொறுப்பேற்றுக் கொள்வார்கள். அன்று முதல் அடுத்த ஆண்டு ஐப்பசி வரை இவர்கள் சன்னிதானத்திலே தங்கியிருந்து வழிபாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x