Published : 16 Oct 2019 12:02 PM
Last Updated : 16 Oct 2019 12:02 PM
விருதுநகர்
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்காக விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள ஓடைப்பட்டி ஸ்ரீவன்னி விநாயகர் திருக்கோயிலில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு பூஜை செய்தார்.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் அக்.21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் அக்.24-ல் வெளியாகிறது.
இதனையொட்டி ஆளும் அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் நாங்குநேரியில் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஸ்ரீ வன்னிவிநாயகர் திருக்கோயிலில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று (அக்.16) காலை சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார்.
வன்னி விநாயகர் திருக்கோயில் சார்பாக துணை முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெறுவதற்காக தொடர்ந்து பல கோயில்களில் அதிமுக சார்பில் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு பிரார்த்தனை செய்து வருவதாகவும் அந்த வரிசையில்தான் வன்னி விநாயகர் திருக்கோயிலும் வெற்றிக்காக சிறப்பு பூஜை செய்யப்பட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறப்பு பூஜைகளை முடித்துக் கொண்டு தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் நாங்குநேரி புறப்பட்டுச் சென்றார்.
நாங்குநேரியில் அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் களம் காண்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT