Published : 16 Oct 2019 11:27 AM
Last Updated : 16 Oct 2019 11:27 AM
தூத்துக்குடி
ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் தற்போது அவர் அதிமுகவை சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்துள்ளார்.
ஸ்டெர்லைட் கலவரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (அக்.16) தூத்துக்குடியில் உள்ள முகாம் அலுவலகத்தில், நீதிபதி அருணா ஜெகதீசன் முன்னிலையில் நேரில் ஆஜரானார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அலிபாபாவும் 40 திருடர்களும் என்பதுபோல, அம்மாவும் 40 திருடர்களும் என்பதுபோல தமிழக அமைச்சர்கள் உள்ளனர். இப்போது அம்மா இல்லை, திருடர்கள்தான் இருக்கிறார்கள்" எனக் கூறியுள்ளது சர்ச்சையானது.
அவர் அளித்த பேட்டியின் முழுவிவரம்:
''ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக ரஜினி தெரிவித்தது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய ஒரு நபர் ஆணையத்தில் வலியுறுத்துவேன்.
தீவிரவாதிகள் ஊடுருவியது அவருக்கு எப்படித் தெரியும். அவர் உளவுத்துறை வைத்துள்ளாரா? போராடிய மக்கள் சமூக விரோதிகள் என்றால் நச்சு ஆலைக்கு அனுமதி கொடுத்து போராடத் தூண்டியவர்களும் சமூக விரோதிகள் தான்.
ராஜீவ் காந்தி கொலை குறித்துப் பேசியதற்கு என் மீது வழக்கு என்பது புதிதல்ல. பலமுறை இதுபோல் நடந்துள்ளது. இடைத்தேர்தல் குறித்த திமுக, அதிமுகவின் விளையாட்டு மிகவும் அசிங்கமானது. அதில் என்னை ஈடுபடுத்த வேண்டாம். நாங்கள் போராட்டக்காரர்கள். களத்தில் நிற்கிறோம்.
வெளிநாடுகளில் இருந்து எனக்குப் பண உதவி வருகிறது என்றால் அதைக் கண்டுபிடிக்க வேண்டியதுதான் வருமானவரித் துறையின் கடமை. அவர்கள் என் வீட்டில் ஒரு முறை வருமான வரி சோதனை செய்து பார்க்கட்டும். என் மீது பாசமும் நம்பிக்கையும் இருப்பதால் எனக்குக் கொடுக்கிறார்கள்.
இவர்களைப் போல் வெளிநாடுகளில் போய் என் நாட்டிற்கு முதலீடு செய்ய வாருங்கள் என்று அழைக்கவில்லை. அப்படியும் யாரும் வரவில்லை. என்னைப் பொறுத்தவரை அலிபாபாவும் 40 திருடர்களும் போல் இவர்கள், 'அம்மா'வும் 40 திருடர்களும். இப்பொழுது 'அம்மா' இல்லை. நாற்பது திருடர்கள் மட்டும் இருக்கின்றனர்.
இப்பொழுது ரவுடிகள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அதனால் போராட்டம் செய்பவர்கள் ரவுடிகளாகத் தெரிகிறார்கள். எங்களிடம் அதிகாரம் வரும்பொழுது இவர்கள் நிலை மாறும் ஒரு காலம் வரும்.
தமிழகம் வளக் கொள்ளைக்கான காடாக மாற்றி விட்டார்கள். அரசின் கொள்கைக்கு ஆதரவாகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு அடக்குமுறை செய்துள்ளது.
எதற்கு அரசு நாடகம் போடுகிறது உண்மையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட எண்ணம் இருக்கிறதா. அதற்காக எந்த முயற்சியும் செய்யப்படவில்லை. போராட்டம் தொடர்பாக என் கட்சியினர் மீது தான் அதிக வழக்கு போடப்பட்டுள்ளது. அதனால் என்னை இன்று விசாரணைக்கு அழைத்துள்ளனர்''.
இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT