Last Updated : 15 Oct, 2019 05:22 PM

1  

Published : 15 Oct 2019 05:22 PM
Last Updated : 15 Oct 2019 05:22 PM

ஆளுங்கட்சி மக்களை சந்திக்காததால் திமுக மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கிறது: நாங்குநேரி தொகுதியில் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்

திருநெல்வேலி

தமிழகத்தில் ஆளும் அதிமுக மக்களை சந்திக்காததால் எதிர்க்கட்சியான திமுக மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறது என்று நாங்குநேரி தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

இத்தொகுதியில் 2-ம் கட்ட பிரச்சாரத்தை இன்று (அக்.15) அவர் மேற்கொண்டார். களக்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட கடம்போடுவாழ்வு மற்றும் சவளைக்காரன்குளம் பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து பேசிய ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவு கேட்டு பேசியதாவது:

ஆளும் கட்சி மக்களை சந்திக்காத காரணத்தால் எதிர்க்கட்சியான திமுக மக்களை சந்தித்து வருகிறது. நாங்கள் ஆளுகின்றபோதும் இதே மாதிரி மக்களை சந்தித்து குறைகளை கேட்டோம். தமிழகத்தில் 5 முறை திமுக ஆட்சியின்போது விவசாயிகளுக்கு, பெண்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தியிருந்தோம்.

நான் எம்எல்ஏவாக இருந்தபோதும், மேயராக இருந்தபோதும் இதுபோல் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டேன். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும், துணை முதல்வராக இருந்தபோதும் அந்தந்த மாவட்டங்களுக்கு அதிகாரிகளோடு சென்று மக்களின் குறைகளை கேட்டு அறிந்தேன். அதே பணியைத்தான் எதிர்க்கட்சி தலைவரான பின்பும் செய்துவருகிறேன்.

எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதா வழிநடத்திய அதிமுக இப்போது இல்லை. மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜகவுக்கு அடிமையாக , எடுபிடியாக, கூஜா தூக்குகிற ஆட்சியை எடப்பாடி அரசு நடத்துகிறது.

நாடு நன்றாக இருந்தால்தான் மக்கள் நன்றாக இருக்க முடியும். தமிழகத்தில் அதிமுக ஆட்சியை அகற்றுவதற்கு நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தல் மூலம் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்படும் என்றார்.

இத்தொகுதிக்கு உட்பட்ட தளபதி சமுத்திரம் பொன்னாக்குடி, கேடிசி நகர் வடக்கு ,பர்கிட்மா நகர், சீவலப்பேரி ஆகிய பகுதிகளிலும் அவர் இன்று மாலையில் அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x