Published : 15 Oct 2019 03:45 PM
Last Updated : 15 Oct 2019 03:45 PM
தூத்துக்குடி
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி ஆகிய 5 மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது. அங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (அக்.15) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர், தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பிரத்யேக சிகிச்சைப் பிரிவினை பார்வையிட்டு நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில், "தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் தேவையான வசதிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தமிழகம் முழுவதும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு, மழைநீர் தேங்குவது, நன்னீர் தேங்கி நிற்பதும் சவாலாக இருந்து வருகிறது.
தூத்துக்குடியில் பலர் காய்ச்சல் மற்றும் பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் சரியான நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது 100% உயிரிழப்பு இல்லாத அளவிற்கு குணமடையலாம்.
காய்ச்சல் வந்தவுடன் பொதுமக்கள் தாமதப்படுத்தாமல், அலட்சியப்படுத்தாமல் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி ஆகிய 5 மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது. அங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் பாதிப்பு மருத்துவமனையில் அனுமதிக்க சிகிச்சைக்காக அனுமதிக்கப் படுகிறார்கள் 10 சதவீதம் பேர்த்தான் டெங்குவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் . டிசம்பர் மாதம் வரையிலும் காய்ச்சல் பாதிப்பு இருக்கக்கூடும் என்பதால், காய்ச்சலைக் கட்டுப்பட்டுத்த தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தொடர் கண்காணிப்பையும் மேற்கொண்டு வருகிறோம்.
மேலும் மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார். ஆய்வின்போது, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சின்னப்பன் எம்எல்ஏ, ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT