Published : 15 Oct 2019 02:12 PM
Last Updated : 15 Oct 2019 02:12 PM
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. குற்றாலம் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,இன்று அதிகாலை 4 மணிக்கு மேல் தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், குற்றாலம், அம்பாசமுத்திரம், பாபநாசம், சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழையும், மற்ற பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது.
காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக சேர்வலாறு அணைப் பகுதியில் 40 மி.மீ. மழை பதிவானது. மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மில்லிமிட்டரில்) விவரம் வருமாறு:
அம்பாசமுத்திரம்- 38.20, அடவிநயினார் கோவில் அணை- 37, சிவகிரி- 34, தென்காசி- 33.40, மணிமுத்தாறு- 32.60, கருப்பாநதி அணை- 29.50, ராதாபுரம்- 25, பாபநாசம், ராமநதி அணையில் தலா 20, ஆய்க்குடி- 19.20, குண்டாறு அணை- 14, நம்பியாறு அணை- 12, திருநெல்வேலி- 10, செங்கோட்டை- 8, சங்கரன்கோவில்- 7, பாளையங்கோட்டை- 6.40, நாங்குநேரி- 6, கடனாநதி அணை- 2, சேரன்மகாதேவி- 1.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.
பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கான மொத்த நீர் வரத்து விநாடிக்கு 377 கனஅடியாக இருந்தது. 355 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. பாபநாசம் அணை நீர்மட்டம் 105.70 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 118.24 அடியாகவும் இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 215 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை. நீர்மட்டம் அரையடி உயர்ந்து 43.65 அடியாக இருந்தது.
கடனாநதி அணை நீர்மட்டம் 69 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 74 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 70.21 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடியாகவும் இருந்தது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 2.75 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 6.88 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 32.50 அடியாகவும், அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் 121.50 அடியாகவும் இருந்தது.
காலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்வோர் கடும் அவதிப்பட்டனர். பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி நுழைவுவாயில் முதல் வகுப்பறைகள் வரை பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கிக் கிடந்தது.
இதனால், மாணவிகள் கடும் அவதிப்பட்டனர். இடி, மின்னல் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
குற்றாலம் அருவிகளில் நேற்று குறைவான அளவில் தண்ணீர் விழுந்தது. இந்நிலையில், மலைப் பகுதியில் பலத்த மழை பெய்ததால் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT