Published : 15 Oct 2019 12:36 PM
Last Updated : 15 Oct 2019 12:36 PM
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் இன்று (அக்.15) அதிகாலை முதலே பரவலான மழை பெய்து வருவதால் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. இன்று மட்டும் 800 பட்டாசு தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தப்பட்டுள்ளது.
சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இம்மாதம் 27-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி பட்டாசு ஆலைகளில் இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ஏற்கெனவே, பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, பட்டாசு உற்பத்தியில் பேரியம் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் விதித்த தடை மற்றும் சரவெடி தயாரிக்க தடை விதிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையையும் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி இறுதிக்கட்டத்தை எட்டியது. ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, காரியாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் சில இடங்களில் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
குறிப்பாக சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தி இன்று முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
தொடர் மழையால் சிவகாசியில் இன்று 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் உற்பத்தி மேற்கொள்ளப்படவில்லை.
இதுகுறித்து மீனம்பட்டி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வினாயகமூர்த்தி கூறுகையில், "பட்டாசு தொழிலை நடத்துவது மிக சவாலான ஒன்றாக இருந்து வருகிறது. சீன பட்டாசு இறக்குமதியாகும் உச்ச நீதிமன்றத்தில் பட்டாசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு காரணமாகவும் உச்ச நீதிமன்றம் விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாகவும் பட்டாசு தொழில் மிகுந்த நெருக்கடியை சந்தித்துள்ளது.
இந்நிலையில் தீபாவளிக்கான இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தி கடந்த ஒரு வாரமாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் இன்று அதிகாலை முதலே தொடர் மழை காரணமாக பட்டாசு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுமார் 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதே போன்று தொடர்மழை பெய்தால் பட்டாசு உற்பத்தியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT