Published : 15 Oct 2019 12:38 PM
Last Updated : 15 Oct 2019 12:38 PM
சென்னை
"உங்கள் மகளை வரவேற்க இன்னோரு மகளைக் கொன்றுள்ளீர்கள்" என சுபஸ்ரீ மரணத்துக்குக் காரணமாக இருந்த பேனரை வைத்த ஜெயகோபாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் 2-ம் தேதி சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்ற பெண் கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரி ஏறி, உடல் நசுங்கிப் பலியானார். இந்தச் சம்பவம் தொடர்பாக அதிமுக நிர்வாகி ஜெயகோபால் அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த 27-ம் தேதி இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த 12 நாட்களாக சிறையில் இருக்கும் இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், தனது மகளின் திருமணத்திற்காக வாழ்த்து கூறி கட்சியினர் பேனர் வைத்ததாகவும், வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு சாலையில் பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் ஏதும் தங்களுக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு இன்று (அக்.15) நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, "உங்கள் மகளை வரவேற்க இன்னோரு மகளைக் கொன்றுள்ளீர்கள்" என்று கண்டனம் தெரிவித்த நீதிபதி, ஏன் இவ்வளவு நாள் தலைமறைவாக இருந்தீர்கள் என ஜெயகோபால் தரப்புக்குக் கேள்வி எழுப்பினார். இதற்கு ஜெயகோபால் தரப்பில், விபத்து நடத்த பிறகு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது..
இதனையடுத்து இந்த வழக்கு குறித்து பதில் மனுத்தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால், வழக்கு விசாரணையை அக்டோபர் 17-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT