Published : 15 Oct 2019 08:33 AM
Last Updated : 15 Oct 2019 08:33 AM
க.சே.ரமணி பிரபா தேவி
ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் நிரப்பப்பட்டிருக்கும் குளிர்பானத்தை எவ்வளவு நேரத்தில் காலிசெய்வீர்கள்? ஒரு நிமிடம்? இரண்டு நிமிடங்கள்? ஆனால், குடித்துவிட்டு வீசும் காலி பிளாஸ்டிக் பாட்டிலைக் கடலுக்குள் வீசினால் அது மக்குவதற்கு 500 ஆண்டுகள் ஆகும் என்பது தெரியுமா? குடித்துவிட்டு நாம் தயக்கமின்றித் தூக்கி வீசுகிறோம். அதனால்தான், அதிக பிளாஸ்டிக் மாசை ஏற்படுத்தும் நாடுகளின் பட்டியலில் நாம் முன்வரிசையில் நிற்கிறோம்.
அதிக மாசை ஏற்படுத்தும் நாடுகள்
ஐநா அகதிகள் தூதரகம் மற்றும் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சீனா (30%), அமெரிக்கா (15%), இந்தியா (7%) ஆகியவை முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன. அமெரிக்கா, ஐரோப்பா, ஜெர்மனி ஆகிய நாடுகள் அதிக அளவிலான பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகின்றன என்றாலும், முறையான கழிவு மேலாண்மை மூலம் கழிவின் அளவைக் கணிசமாகக் குறைத்துவிடுகின்றன. ஆண்டுதோறும் 5.13 கோடி டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுகின்றன. இதில் 80% கழிவுகள் வெறும் 20 நாடுகளிலிருந்து மட்டுமே கொட்டப்படுகின்றன என்றால் நம்ப முடிகிறதா?
தினந்தோறும் உருவாகும் சுமார் 1.5 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகளில் 90%, அதாவது, 1.35 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகள் முறையாகக் கையாளாமல் குப்பைக்கே செல்கின்றன. இத்தகவலை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், வனத் துறை மற்றும் பருவநிலை மாற்றத் துறை தெரிவித்துள்ளது. அத்துறையின் இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ, “நாடு முழுவதும் 60 மாநகரங்களில் நடத்திய ஆய்வில், 3 பெருநகரங்கள் தினந்தோறும் 4.06 டன் பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன” என்று தெரிவித்துள்ளார். நிலங்களில் கொட்டப்படும் குப்பைகளின் அளவை இதுவரை கணக்கிடவில்லை என்றும் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. கழிவு மேலாண்மையில் நமக்கு இருக்கும் அலட்சியத்தைத்தான் இது உணர்த்துகிறது.
கடலில் பிளாஸ்டிக் எப்படிக் கலக்கிறது?
கடற்கரைக்கு அருகே உள்ள நிலங்களைச் சுற்றி சுமார் 200 கோடி மக்கள் வசிக்கின்றனர். எனவே, கடல் மற்றும் அதற்கு அருகமைப் பகுதிகளிலிருந்து 30% பிளாஸ்டிக்குகள் கடலில் கலக்க நேர்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளை ஆறுகளில் கொட்டுவதால் அவை ஆற்றோடு அடித்துச்செல்லப்பட்டு கடலில் கலந்துவிடுகின்றன. ஆசிய ஆறுகளிலிருந்து 86% பிளாஸ்டிக் குப்பைகள் கடலுக்குச் சென்றுசேர்கின்றன. அதிலும் சீனாதான் முதல் இடம்.
பிளாஸ்டிக் கழிவுகள் மூன்று வகைகளில் கடல் உயிரினங்களையும் தாவரங்களையும் பாதிப்புக்குள்ளாக்குகின்றன. 1) பிளாஸ்டிக் குப்பைகளின் பின்னலுக்குள் சிக்கி உயிரை விடுவது, 2) பிளாஸ்டிக்கை உட்கொள்வது, 3) பிளாஸ்டிக் மீது உராய்வதால் சிராய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்வது. பெரும்பாலான கடல் ஆமைகள், மூன்றில் இரு பங்கு நீர் நாய்கள், மூன்றில் ஒரு பங்கு திமிங்கிலம், கடல்வாழ் பறவைகள், 89 வகையான மீன்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் கயிறுகள், வலைகள், பயன்படுத்தாமல் கைவிட்ட தூண்டில்களும் பின்னல்களை ஏற்படுத்துகின்றன. திமிங்கிலத்தின் வயிற்றில் 9 மீ நீளம் கொண்ட பிளாஸ்டிக் கயிறு, 4.5 மீ நீள பிளாஸ்டிக் குழாய், பிளாஸ்டிக் கவர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிளாஸ்டிக் மீது உராய்ந்து சிராய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ளும், பின்னல்களுக்குள் சிக்கி உயிரை விடும் உயிரினங்கள் ஏராளம்.
2017-18ல் மட்டும் 1.65 கோடி டன் பிளாஸ்டிக்கை இந்தியா பயன்படுத்தியுள்ளது. 2020-ல் 2.2 கோடி டன்களாக அதிகரிக்கும் என்று எப்சிசிஐ அறிக்கை தெரிவிக்கிறது. இதில் சுமார் பாதியளவு, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதித்த தமிழக அரசின் தடையை முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலமும், அந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று ஏற்பாடுகளை துரிதப்படுத்துவதன் மூலமும் பெருமளவில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்துவிடலாம்.
(தொடர்வோம்...)
- க.சே.ரமணி பிரபா தேவி,
தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT